மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியாவுக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு
By DIN | Published On : 06th December 2019 09:09 PM | Last Updated : 06th December 2019 09:09 PM | அ+அ அ- |

முதல் டி20 போட்டி
ஹைதராபாத்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவுக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதையடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் லென்டில் சிம்மன்ஸ் மற்றும் எவின் லிவிஸ் ஆகியோர் களம் இறங்கினர். சிம்மன்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் களத்தில் இணைந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை சிதறடித்தது.
லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்களும், கிங் 31 ரன்களும் எடுத்தார்கள். பின்னர் களமிறங்கிய ஹெட்மையர் தன் பங்குக்கு 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு தலைவலியாக அமைந்தார்.
பொல்லார்டு வழக்கம் போல் அதிரடியாக 19 பந்தில் 4 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 37 ரன்கள் குவித்தார். ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. ஹோல்டர் 9 பந்துகளில் 24 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் யுவேந்திர சஹால் 2 விக்கெட்டுகளும், வாஷிங்க்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
208 ரன்களை வெற்றி இலக்காககே கொண்டு களமிறங்கிய இந்திய அணி 4 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகிறது.