அமித் ஷாவின் மகன் கிரிக்கெட் நிர்வாகியாக இருக்கக் கூடாதா?: செளரவ் கங்குலி கேள்வி

அவர் தந்தை தான் அரசியல்வாதி. அவரல்ல. ஜெய் ஷாவைத் தனிப்பட்ட முறையில் மதிப்பிட வேண்டும்.
அமித் ஷாவின் மகன் கிரிக்கெட் நிர்வாகியாக இருக்கக் கூடாதா?: செளரவ் கங்குலி கேள்வி

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 39-ஆவது தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி (47), கடந்த அக்டோபர் மாதம் தேர்வானார். பிசிசிஐயின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்தியா டுடே ஊடகத்தின் நிகழ்ச்சில் ஒன்றில் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:

இந்தியாவில் நீங்கள் ஒரு பிரபலத்தின் மகனாகவோ மகளாகவோ இருந்தால் நீங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது. தன் மகனை கிரிக்கெட் வீரராகப் பாருங்கள், சச்சினின் மகனாகப் பார்க்காதீர்கள் என சச்சின் கூறியிருக்கிறார். சச்சினின் மகனாக இருப்பதால் சச்சினின் மகன் கிரிக்கெட் விளையாட்டில் ஏன் ஈடுபடக் கூடாது? இதுபோன்று ஆஸ்திரேலியாவிலோ இங்கிலாந்திலோ நடப்பதில்லை. மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் ஆகிய இரு சகோதரர்களும் 100 டெஸ்டுகள் விளையாடியுள்ளார்கள். எல்லோரும் தனிப்பட்டமுறையில் மதிப்பிடப்படவேண்டும்.

நல்லவேளையாக எனக்கு மகன் இல்லை. ராகுல் டிராவிடின் மகன்கள் கர்நாடக கிரிக்கெட் லீக்குகளில் சதங்கள் அடித்து வருகிறார்கள். திறமை இருந்தால் அவர்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். இதே தான் ஜெய் ஷாவுக்கும் சொல்வேன். அவர், அமித் ஷாவின் மகனாக இருந்தால் என்ன? அவர் ஒரு தேர்தலில் வென்றுள்ளார். கடந்த 6-7 வருடங்களாக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் சொந்தமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும். அவர் தந்தை தான் அரசியல்வாதி. அவரல்ல. ஜெய் ஷாவைத் தனிப்பட்ட முறையில் மதிப்பிட வேண்டும். கடந்த ஒரு மாதமாகத்தான் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவர் அனுசரித்து நடந்துகொள்கிறார். இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என எண்ணுகிறார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் தான் அரசியல்வாதிகள் சிலர் பிசிசிஐயின் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டார்கள். எனவே அரசியல்வாதிகள் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல, கடைசியாகவும் இருக்காது. இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகவும் வலுவான ஒன்று. கிரிக்கெட்டை வேறு எதுவும் பின்னுக்குத் தள்ளமுடியாது. இதன் அடிப்படையில் செல்வாக்குள்ள மனிதர்களை இது ஈர்க்கும் என்று கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com