பரபரப்பான ரஞ்சி இறுதி ஆட்டத்தில் 5 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா!

செளராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது விதர்பா அணி... 
பரபரப்பான ரஞ்சி இறுதி ஆட்டத்தில் 5 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா!

செளராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது விதர்பா அணி. 

இரு அணிகளுக்கு இடையிலான இறுதிச் சுற்று ஆட்டம் நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. செளராஷ்டிர அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விதர்பா ஆரம்பத்தில்  7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் விதர்பா அணியின் பேட்ஸ்மேன்கள் அக்ஷய் கர்னேவர் 73, அக்ஷய் வாக்ரே 34 ஆகியோர் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 120.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 312 ரன்களை எடுத்தது விதர்பா. செளராஷ்டிரா தரப்பில் உனதிகட் 3, சகாரியா, மக்வானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய செளராஷ்டிர அணி,  2-ம் நாள் முடிவில் 59 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்த செளராஷ்டிர அணி 9-வது விக்கெட்டை இழந்தபோது அணியின் ஸ்கோர், 247. எனினும் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் உனாட்கட், சகாரியா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 50 ரன்களுக்கும் அதிகமாகச் சேர்த்தார்கள். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் நிலைமை உருவானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உனாட்கட் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் செளராஷ்டிர அணி 117 ஓவர்களில் 307 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் வாய்ப்பை இழந்தது செளராஷ்டிர அணி. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஸ்னெல் படேல் சிறப்பாக விளையாடி 102 ரன்கள் எடுத்தார். முதல் 7 விக்கெட்டுகளை 184 ரன்களுக்குள் இழந்தாலும் செளராஷ்டிர அணியின் பின்வரிசை வீரர்கள் மிகவும் பக்குவமாக விளையாடி விதர்பா அணியின் ஸ்கோருக்கு அருகில் செல்ல பேருதவி செய்தார்கள். விதர்பா தரப்பில் சர்வேட் 5 விக்கெட்டுகளையும் வாக்ரே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி முன்னிலை பெற்றுள்ளதால் ஒருவேளை இந்த ஆட்டம் டிராவில் முடிந்தால் அந்த  அணியே மீண்டும் ரஞ்சி சாம்பியன் ஆனதாக அறிவிக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com