பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு: சர்வதேச விளையாட்டில் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தில் இந்தியா?

பாகிஸ்தான் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு விசா மறுத்த விவகாரத்தால் சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.
பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு: சர்வதேச விளையாட்டில் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தில் இந்தியா?


பாகிஸ்தான் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு விசா மறுத்த விவகாரத்தால் சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.

பரமவைரியான பாகிஸ்தான் பயங்கரவாதம் மூலம் இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை தந்து வருகிறது. ஏற்கெனவே மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து 2008 முதலே இரு தரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுவது முற்றிலும் நின்று விட்டது. இடையில் 2012-இல் மட்டுமே பாகிஸ்தான் அணி ஒருநாள் ஆட்டங்களுக்காக இந்தியாவுக்கு வந்து சென்றது.

இதைத் தவிர உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தானுடன் ஆடுகிறது இந்திய அணி.

ஆனால் மற்ற விளையாட்டுகளில் இந்நிலை இருப்பதில்லை. ஹாக்கி, கால்பந்து, ஸ்குவாஷ் உள்பட இதர விளையாட்டுகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து செல்வதில் எந்த பிரச்னையும் எழவில்லை.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி

இந்நிலையில் புதுதில்லியில் தற்போது உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது. வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக இதில் 16 கோட்டா இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு

இந்நிலையில் ரேபிட் ஃபயர் பிரிவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் ஜிஎம்.பஷீர், கலீல் அகமது மற்றும் மேலாளர் என 3 பேர் விசாவுக்காக விண்ணப்பித்திருந்தனர். முதலில் விசா வழங்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே கடந்த 14-ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் கொதிப்படைந்து, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே பாக்.வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை என இந்திய தரப்பில் கூறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் துப்பாக்கி சுடும் சம்மேளனம், உரிய நடவடிக்கை எடுக்க சர்வதேச சம்மேளனத்துக்கு வலியுறுத்தியது. 16 ஒலிம்பிக் கோட்டா இடங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறியது.
இந்நிலையில் 16 இடங்களும் ரத்து செய்யப்பட்டதாக சர்வதேச சம்மேளன தலைவர் விளாடிமீர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய துப்பாக்கி சுடும் சம்மேளனம் போன்றவற்றின் கடும் முயற்சியால், 2 இடங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டது, வீரர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.


சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை

பாக். வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரத்தை ஐஓசி கடுமையாக எடுத்துக் கொண்டது. வியாழக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. ஒலிம்பிக் சட்ட வரையறையை மீறியுள்ளது இந்தியா. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பிற நாட்டு வீரர்களுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது என்பது விதி.

15 நாள்களில் உறுதிமொழி தர வேண்டும்

இந்திய அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை 15 அல்லது 20 நாள்களில் தர வேண்டும். அதுவரை சர்வதேச போட்டிகளை நடத்துவது தொடர்பான மத்திய அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நிறுத்தப்படுகிறது என ஐஓசி எச்சரித்துள்ளது. 

மேலும் கூடுதலாக சர்வதேச போட்டிகளை உறுதிமொழி பெறாமல் ஒதுக்கக்கூடாது என சம்மேளனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழல், சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும்.நாங்கள் அரசிடம் தீவிரமாக முயற்சித்து வருகிறோம்.

விளையாட்டையும், அரசியலையும் தனியாக பிரித்து பார்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரியுள்ளனர். 


கொசொவா வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு

ஏற்கெனவே கடந்த ஆண்டில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் கொசொவோ வீராங்கனைக்கு இந்தியா விசா தரவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொசொவா என்ற நாட்டை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என இந்தியஅரசு விளக்கம் தந்தது.

இச்சம்பவத்தின் போதும் ஐஓசி இந்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவின் நிலை சர்வதேச அளவில் குலைந்து விடும். ஐஓசி கோரியப்படி எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை இந்திய அரசு வழங்கி, விளையாட்டு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம், குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com