57 பந்துகளில் சதம், 140 ரன்கள்: திசாரா பெரேராவின் அதிரடியில் தப்பிப் பிழைத்த நியூஸிலாந்து அணி!
By எழில் | Published On : 05th January 2019 03:37 PM | Last Updated : 05th January 2019 03:44 PM | அ+அ அ- |

தப்பிப் பிழைத்துள்ளது நியூஸிலாந்து அணி. இது ஒரு எதிர்பாராத திருப்பமும் கூட.
நியூஸிலாந்தின் 320 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட இலங்கை அணி கொஞ்சமும் முடியாமல் 128 ரன்களுக்குள் முதல் 7 விக்கெட்டுகளை இழந்தது. முடிந்தது கதை என்று எண்ணியபோது சிக்ஸர் அடிப்பதற்கென்றே பிறந்ததுபோல நியூஸிலாந்தின் பந்துவீச்சைத் திடீரென திணறடித்தார் திசாரா பெரேரா. 28-வது ஓவரில் ஆரம்பித்த அதிரடி ஆட்டமும் சிக்ஸர் மழையும் 47-வது ஓவரில்தான் முடிந்தது. எப்படிப் போட்டாலும் அடிக்கிறான் என்று நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் மிரளும் அளவுக்கு மொத்தம் 13 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடித்தார் பெரேரா. 57 பந்துகளில் சதம்! கூடவே அவர், நியூஸி. ஃபீல்டர்களுக்கு ஆறு முறை கேட்ச் கொடுத்தும் அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவிட்டார்கள். கடைசியில் 74 பந்துகளில் 140 ரன்கள் எடுத்த பெரேரா கடைசி வீரராக ஆட்டமிழந்து வெளியேறினார். புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது நியூஸிலாந்துக்கு.
இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையை நிச்சயம் உணர்ந்திருப்பார் பெரேரா. அவரைத் தவிர வேறு எந்த இலங்கை வீரரும் ஒரு சிக்ஸும் அடிக்கவில்லை. இதற்கு முன்பு ஜெயசூர்யா 11 சிக்ஸர் அடித்து அதிக சிக்ஸர் அடித்த இலங்கை வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். இப்போது அந்தச் சாதனை பெரேரா வசம் வந்துவிட்டது.
நியூஸிலாந்து அணி முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்ற நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டமும் மெளண்ட் மெளன்கானியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இது நல்ல முடிவாக அமைந்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. இந்தமுறை தொடக்க வீரர் மன்றோ சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார். டெய்லர் 90 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணி 300 ரன்களை நெருங்க உதவினார். நியூஸிலாந்து அணிக்கு வலுவான 6-ம் நிலை வீரர் உள்ளார். ஜேம்ஸ் நீஷம். முந்தையை ஒருநாள் ஆட்டத்தில் ஒரு ஓவரில் 5 சிக்ஸர் அடித்த நீஷம் இந்தமுறையும் தீபாவளி கொண்டாடினார். 37 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை அடைய உதவினார். கடைசியில் அவருடைய இந்த அதிரடி ஆட்டம்தான் நியூஸிலாந்தின் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.