பஞ்சாப் வெளியேற்றத்தால் அதிக ரன்களைக் குவிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ள ஷுப்மன் கில்!

19 வயது ஷுப்மன் கில், இதுவரை விளையாடிய 7 ரஞ்சி ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது...
பஞ்சாப் வெளியேற்றத்தால் அதிக ரன்களைக் குவிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ள ஷுப்மன் கில்!

குரூப் பி பிரிவில் இடம்பெற்ற பஞ்சாப் அணி, 23 புள்ளிகள் மட்டுமே பெற்று காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் மேலும் அதிக ரன்களை எடுக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் இளம் வீரர் ஷுப்மன் கில். 

19 வயது ஷுப்மன் கில், இதுவரை விளையாடிய 7 ரஞ்சி ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது எடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இதுவரை விளையாடிய 9 முதல்தர ஆட்டங்களிலும் தலா ஒரு அரை சதம் எடுத்து அசத்தியுள்ளார். 9 ஆட்டங்களில் 3 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். இந்த வருடம் 5 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடி 2 சதங்கள் 4 அரை சதங்களுடன் 728 ரன்கள் எடுத்துள்ளார். தமிழகத்துக்கு எதிராக 268 ரன்களும் ஹைதராபாத்துக்கு எதிராக 148 ரன்களும் எடுத்து அதிகக் கவனம் ஈர்த்தார். 

இதனால் 19 வயதுதான் என்றாலும் இந்திய அணிக்கு ஷுப்மன் கில்லைத் தேர்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா-வுக்கு அடுத்ததாக மூன்றாவது தொடக்க வீரராக கில்லைத் தேர்வு செய்யப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். பஞ்சாப் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்று, மேலும் அடுத்தக்கட்டங்களுக்கு முன்னேறியிருந்தால் இன்னும் அதிகமான ரன்களை எடுத்திருப்பார் ஷுப்மன் கில். 2019-ல் இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்பதே என் விருப்பம் என்று அவரும் தனது கனவை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கிறதோ இல்லையே, அதற்குப் பதிலாக இந்திய  ஏ அணியில் தொடர்ந்து இடம்பெறுவார், அதன்மூலமாக மேலும் ரன்கள் குவித்து இந்திய அணிக்குத் தேர்வாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிப்பார் என்கிற நம்பிக்கையை உருவாக்கியுள்ளார் ஷுப்மன் கில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com