காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித்: அறுவை சிகிச்சையால் சிக்கலாகும் நிலைமை!

பிக் பாஷ் போட்டியில் விளையாடி வந்த ஸ்மித், முழங்கையில் காயம் ஏற்பட்டதால் அப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்... 
காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித்: அறுவை சிகிச்சையால் சிக்கலாகும் நிலைமை!

மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப வேண்டிய ஸ்டீவ் ஸ்மித், காயம் காரணமாக தனது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளார். 

கடந்த வருடம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவர்களுடைய பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் சார்பில் இந்தத் தடையை நீக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மூன்று வீரர்களின் தடை தொடரும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்தது.

இந்நிலையில் பிக் பாஷ் போட்டியில் விளையாடி வந்த ஸ்மித், முழங்கையில் காயம் ஏற்பட்டதால் அப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆறு வார காலம் அவரால் கிரிக்கெட்டில் ஈடுபடமுடியாது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்தும் விலகியுள்ள ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. மேலும் இதனால்
மார்ச் 23-ல் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியிலும் ஸ்மித் கலந்துகொள்ளப்போவதில்லை என அறியப்படுகிறது. 

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி, ஏப்ரல் 23 அன்று அறிவிக்கப்படவுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் எதிலும் பங்கேற்காமல் உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்மித் எப்படிப் பங்கேற்பார் என்கிற கேள்வி தற்போது எழுகிறது. ‘ஸ்மித்தின் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்’ என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com