முதல் ஆஷஸ் டெஸ்டில் ஆர்ச்சருக்கு இடமில்லை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

முதல் ஆஷஸ் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பையில் அசத்திய ஆர்ச்சர் இடம்பெறவில்லை.
முதல் ஆஷஸ் டெஸ்டில் ஆர்ச்சருக்கு இடமில்லை: இங்கிலாந்து அணி அறிவிப்பு


முதல் ஆஷஸ் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பையில் அசத்திய ஆர்ச்சர் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் முதல் ஆஷஸ் ஆட்டத்துக்கான 14 வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து அணி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. உள்ளூரில் நடைபெறும் ஒரு ஆட்டத்துக்கு 14 வீரர்களை தேர்வு செய்வது முன்னெப்போதும் இல்லாத வகையிலான செயல் என்றாலும் அறிவிக்கப்பட வேண்டிய சூழல் என்று இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பையில் அசத்திய ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதேசமயம், பென் ஸ்டோக்ஸுக்கு மீண்டும் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதில், ஜோஃப்ரா ஆர்ச்சரின் இடம் அனைவரது தரப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள முதல் ஆஷஸ் ஆட்டத்துக்கான 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை இங்கிலாந்து இன்று அறிவித்தது. இதில், எதிர்பாராதவிதமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பெறவில்லை. 

அண்மையில் நடந்து முடிந்த அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய சாம் கரன் மற்றும் ஆலி ஸ்டோன் ஆகியோரும் முதல் ஆட்டத்துக்கான அணியில் இடம்பெறவில்லை. அதேசமயம், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறாத பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதன்மூலம், ஆர்ச்சர் டெஸ்ட் ஆட்டங்களில் அறிமுகமாக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

முதல் ஆஷஸ் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணி:

  1. ரோரி பர்ன்ஸ்
  2. ஜேசன் ராய்
  3. ஜோ ரூட் (கேப்டன்)
  4. ஜோ டென்லி
  5. ஜோஸ் பட்லர்
  6. பென் ஸ்டோக்ஸ்
  7. ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்)
  8. மொயீன் அலி
  9. கிறிஸ் வோக்ஸ்
  10. ஸ்டுவர்ட் பிராட்
  11. ஜேம்ஸ் ஆண்டர்சன்   


2001-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com