ஆதிக்கத்தை நிலைநாட்டியது இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது.
ஆதிக்கத்தை நிலைநாட்டியது இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது.

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் மிக பரபரப்பான ஆட்டம் எனக் கூறப்பட்டுள்ள இந்த ஆட்டம், மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து ஷிகர் தவன் இல்லாத நிலையில் ரோஹித் சர்மா-லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முகமது ஆமிர் வீசிய ஓவரை மிகவும் கவனமாக எதிர்கொண்டு ஆடினர். அதன் பின்னர் ரோஹித் ஒருமுனையில் அதிரடியாக ஆட, ராகுல் அவருக்கு உறுதுணையாக நிதானமாக ஆடினார். 

ராகுல் 3-ஆவது அரைசதம்

ஒரு சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை பதிவு செய்தார் ராகுல்.  வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் பாபர் ஆஸமிடம் கேட்ச் தந்து 57 ரன்களோடு வெளியேறினார் ராகுல். 78 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அவரது ஸ்கோரில் அடங்கும். உலகக் கோப்பையில் இது முதலாவது அரைசதமாகும்.

ரோஹித் 24-ஆவது சதம்

அபாரமாக ஆடி வந்த ரோஹித் சர்மா தனது 85 பந்துகளில் 24-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 2019 உலகக் கோப்பையில் அவரது 2-ஆவது சதம் இதுவாகும். 3 சிக்ஸர், 14 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 140 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா, ஹாஸன் அலி பந்துவீச்சில் ரியாஸிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அவருக்கு பின் ஆட வந்த ஹார்திக் பாண்டியா 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 26 ரன்களிலும், தோனி 1 ரன்னோடும், ஆமிர் பந்துவீச்சில் வெளியேறினர். 45.1 ஓவரில் 298/4 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

தப்பினார் விஜய் சங்கர்

வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் விஜய் சங்கர் அடித்த பந்தை சர்பராஸ் கேட்ச் பிடித்தார். நடுவர் அதை அவுட் என அறிவிக்க, அதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இதில் பந்து பேட்டில் படாமல் சென்றது ஒளிபரப்பில் தெரிந்தது.  எனினும் அவுட் முடிவு நிராகரிக்கப்பட்டதால் தப்பினார் 
விஜய் சங்கர்.

மழையால் பாதிப்பு

46.4 ஓவரில் 305/4 ரன்களை இந்தியா எடுத்திருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது, விராட் கோலி 71, விஜய் சங்கர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மைதானப் பணியாளர்கள் பிட்சை பாதுகாப்பாக மூடினர். மழை நின்றதும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

6 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி 77 ரன்களுடன் ஆமிர் பந்தில், சர்பராஸிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 

50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது இந்தியா.  விஜய் சங்கர், 15, ஜாதவ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

முகமது ஆமிர் 3 விக்கெட்

பாக். தரப்பில் முகமது ஆமிர் அபாரமாக பந்துவீசி 3-47 விக்கெட்டுகளையும், ஹாஸன் அலி, வஹாப் ரியாஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சரிந்தது பாகிஸ்தான்

337 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் தரப்பில் இமாம் உல் ஹக்-ஃபகர் ஸமான் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி தரும் நிலையில் விஜய் சங்கர் பந்துவீச்சில் 7 ரன்களுடன் எல்பிடபிள்யு ஆனார் இமாம் உல் ஹக்.  அப்போது 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான். 

பாபர் ஆஸம்-ஃபகர் ஸமான் இணைந்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 

20-ஆவது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான். 

ஃபகர் தனது 11-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.  1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 48 ரன்களை எடுத்திருந்த பாபரை போல்டாக்கினார் குல்தீப். அதன் பின் ஹபீஸ் 9, ஷோயிப் மாலிக் 0 என வெளியேறிய நிலையில் 166/5 என திணறிக் கொண்டிருந்தது. 35 ஆவது ஓவர் முடிவில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

புவனேஸ்வர் குமார் காயம்

இந்திய பிரதான பந்துவீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு தொடையில் ஏற்பட்ட காயத்தால் 3-ஆவது ஓவர் வீசிய போது வெளியேறினார். 

துரிதமாக 11,000 ரன்கள் கடந்தார் கோலி

ஒரு நாள் ஆட்டத்தில் துரிதமாக 11,000 ரன்களை கடந்து, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் கேப்டன் விராட் கோலி. 

276 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார் சச்சின் (18,426), ஆனால் விராட் கோலி வெறும் 222 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார். மேலும் இச்சாதனையை புரிந்த 3-ஆவது இந்திய வீரர், 9-ஆவது கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

ரோஹித்-ராகுல் இணை அதிகபட்சம்

ரோஹித் சர்மா-ராகுல் இணைந்து 136 ரன்களை குவித்தது, பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க வரிசை குவித்த அதிகபட்ச ஸ்கோராகும்.
சித்து-டெண்டுல்கர் 90, சேவாக்-டெண்டுல்கர் 53, 
சேவாக்-டெண்டுல்கர் 48, ரமேஷ்-டெண்டுல்கர் 37. 
என உலகக் கோப்பையில் சேர்த்துள்ளனர்.

முகமது ஆமிருக்கு 2 முறை எச்சரிக்கை

பாக். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிருக்கு 2 முறை நடுவர் எச்சரிக்கை விடுத்தார். 3 ஓவர்களில் அவர்  விதிகளை மீறி 2 முறை பிட்சில் ஓடிச் சென்றதால், நடுவர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். 2 முறை எச்சரிக்கை விடப்பட்டதால், மேலும் ஒருமுறை இதே தவறை ஆமிர் புரிந்தால், இனி வரும் ஆட்டங்களில் அவர் ஆடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு

இந்தியா


லோகேஷ் ராகுல்    (சி) பாபர் ஆஸம் (ப) ரியாஸ்    57    78
ரோஹித் சர்மா    (சி) ரியாஸ் (ப) ஹாஸன் அலி    140    113
விராட் கோலி    (சி) சர்பராஸ், (ப) ஆமிர்    77    65
ஹார்திக் பாண்டியா    (சி) பாபர் ஆஸம், (ப) ஆமிர்    26    19
தோனி    (சி) சர்பராஸ், (ப) ஆமிர்    1    2
விஜய் சங்கர்    நாட் அவுட்    15    15
கேதார் ஜாதவ்    நாட் அவுட்    9    8
உதிரிகள்       11

விக்கெட் வீழ்ச்சி 

136-1, 234-2, 285-3, 298-4, 314-5.

பந்துவீச்சு

முகமது ஆமிர்: 10-1-47-3, ஹாஸன் அலி 9-0-84-1,
வஹாப் ரியாஸ் 10-0-71-1, இமாத் வாஸிம் 10-0-49-0.
ஷதாப் கான் 9-0-61-0, ஷோயிப் மாலிக் 1-0-11-0,
முகமது ஹபீஸ் 1-0-11-0.

 பாகிஸ்தான்

இமாம் உல் ஹக்    எல்பிடபிள்யு (ப) விஜய் சங்கர்    7    18
ஃபகர் ஸமான்    (சி) சஹல், (ப) குல்தீப்    62    75
பாபர் ஆஸம்    (ப) குல்தீப்    48    57
முகமது ஹபீஸ்    (சி) விஜய் சங்கர் (ப) பாண்டியா    9    7
சர்பராஸ் அகமது    (ப) விஜய் சங்கர்    12    30
ஷோயிப் மாலிக்    (ப) ஹார்திக் பாண்டியா    0    1
இமாத் வாஸிம்    நாட் அவுட்    46    39
ஷதாப் கான்    நாட் அவுட்    20    14

உதிரிகள்     8


விக்கெட் வீழ்ச்சி 

13-1, 117-2, 126-3, 129-4, 129-5, 165-6.

பந்துவீச்சு

புவனேஸ்வர் 2.4-0-8-0,  பும்ரா 8-0-52-0,  விஜய் சங்கர் 5.2-0-22-2,
ஹார்திக் 8-0-44-2, குல்தீப் 9-1-32-2, சஹல் 7-0-53-0.

நடுவர் அவுட் கூறும் முன்பே வெளியேறிய கோலி

கோலி 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆமிர் பந்துவீச்சில் பந்து பேட்டில் பட்டு, விக்கெட் கீப்பர் சர்பராஸ் கையில் புகுந்தது. அவர் அவுட்டானாரா என நடுவர் தீர்மானித்து அறிவிக்கும் முன்பே, பேட்டில் பந்து பட்டதாக சத்தம் எழுந்ததாக நினைத்து வெளியேறி விட்டார் கோலி. ஸ்னிக்கோ மீட்டர் மூலம் பார்த்த போது, பந்து சிறிதளவு கூட கோலியின் பேட்டில் படவில்லை எனத் தெரிந்தது. 

பின்னர் பெவிலியனில் தனது பேட்டை முழுமையாக ஆய்வு செய்தார் பார்த்தார் கோலி. தவறாக கணித்து கோலி வெளியேறியதால், இந்திய அணி கடைசி ஓவர்களில் கூடுதல் ரன்களை விளாச முடியாமல் சிக்கலுக்கு தள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com