இந்திய அணி அபார பந்துவீச்சு: முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற 237 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்...
இந்திய அணி அபார பந்துவீச்சு: முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற 237 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலிய அணி தற்போது டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்துள்ளது. டி20 தொடரை 2-0 என கைப்பற்றி விட்டது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ராயுடு, ஜடேஜா, குல்தீப் யாதவ், விஜய் சங்கர் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். 

சமீபகாலமாக சரியாக விளையாடாத ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச், ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த கவாஜா ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு ஸ்டாய்னிஸும் நன்கு விளையாடி பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆஸி. அணிக்கு நல்ல கூட்டணி கிடைத்தது. இவர்களை 20-வது ஓவரில்தான் பிரிக்கமுடிந்தது. ஜாதவ் பந்துவீச்சில் ஸ்டாய்ன்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 74 பந்துகளில் அரை சதத்தை எட்டிய கவாஜா மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் விஜய் சங்கரின் அற்புதமான கேட்சினால் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஹாண்ட்ஸ்காம்ப் 19 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் வெளியேறினார். 

ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து அதன்மூலம் ஆஸ்திரேலிய அணியைக் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார் ஷமி.  23 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்திருந்த டர்னர், ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் மேக்ஸ்வெல், 40 ரன்களுடன் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன்பிறகு விரைவாக ரன்கள் எடுக்கத் திணறியது ஆஸ்திரேலிய அணி. எனினும் நாதன் கோல்டர் நைலும் அலெக்ஸ் கேரியும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்தக் கூட்டணி 9 ஓவர்களில் 50 ரன்களை எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்குச் சற்று கெளரவமான ஸ்கோர் கிடைத்தது. கோல்டர் நைல் கடைசி ஓவரில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அலெக்ஸ் கேரி 36 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com