உலகக் கோப்பை அணித் தேர்வில் ஐபிஎல் போட்டியின் தாக்கம் இருக்காது: கோலி
By DIN | Published On : 02nd March 2019 12:53 AM | Last Updated : 02nd March 2019 12:53 AM | அ+அ அ- |

உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் ஐபிஎல் போட்டிகளின் தாக்கம் இருக்காது என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
வரும் மே மாதம் முதல் ஜூலை வரை உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான 15 பேர் அணியை இந்தியா விரைவில் அறிவிக்க உள்ளது. அதற்கு கடைசி வாய்ப்பாக ஆஸி. ஒரு நாள் தொடர் அமைந்துள்ளது.
இந்நிலையில் கோலி வெள்ளிக்கிழமை கூறியதாவது-
உலகக் கோப்பை அணி தேர்வில் ஐபிஎல் போட்டிகளின் தாக்கம் இருக்காது. ஐபிஎல் ஆட்டங்களில் வீரர்கள் எவ்வாறு சிறப்பாக ஆடினாலும், அது அணி தேர்வில் பாதிப்பை ஏற்படுத்தாது. வீரர்களின் ஆட்டத்திறனை ஆய்வு செய்ய உதவும்.
வலிமையான அணி தான் தற்போதைய தேவை. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே உலகக் கோப்பைக்கான அணியை முடிவு செய்து விடுவோம். சில வீரர்கள் ஐபிஎல் ஆட்டங்களில் சரியாக ஆடாவிட்டாலும், அவர்கள் உலகக் கோப்பை அணி தேர்வு வரம்பில்லை இல்லை எனக் கருத முடியாது. அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
ஐபிஎல் முடிந்து 10 நாள்களில் உலகக் கோப்பை தொடங்க உள்ளதால், இங்கிலாந்து செல்லும் வேகப்பந்து வீச்சாளர்களையும் இப்போட்டியில் பங்கேற்க வேண்டாம் என கோலி முன்பு கூறியிருந்தார்.
டி20 தொடரில் ஆஸி. அணி எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டோம். இரண்டாவது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. நாங்கள் ஏன் தோற்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கோலி.