பல்கேரிய மல்யுத்தம்: பஜ்ரங் புனியாவுக்கு தங்கம்
By DIN | Published On : 04th March 2019 01:35 AM | Last Updated : 04th March 2019 01:35 AM | அ+அ அ- |

பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் வினேஷ் போகட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ரூஸ் நகரில் டேன் கோலோவ் -நிகோலா பெட்ரோவ் சர்வதேச மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை இரவு நடைபெற்ற 65 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவு ஆடவர் இறுதி ஆட்டத்தில் பஜ்ரங் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் ஜோர்டான் ஆலிவரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
அபிநந்தனுக்கு அர்ப்பணிப்பு தங்கம் வென்ற பின் புனியா கூறுகையில்: தான் வென்ற தங்கப் பதக்கத்தை பாகிஸ்தானில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமானனுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒரு நாள் அவரை சந்தித்து, வாழ்த்து கூற விரும்புகிறேன் என்றார்.
பஜ்ரங் கடந்த 2018-இல் காமன்வெல்த், ஆசியப் போட்டி உள்பட 4 தங்கம், உலகக் கோப்பையில் 1 தங்கம் வென்றார். இது புனியா வெல்லும் 10-ஆவது பதக்கமாகும்.
வினேஷ்க்கு வெள்ளி
மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் போராடி சீனாவின் பேங் குயான்யுவிடம் தோல்வியுற்று வெள்ளி வென்றார்.
ஏற்கெனவே 59 கிலோ பிரிவில் பூஜா தண்டா தங்கமும், 65 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் வெள்ளியும் வென்றனர். ஆடவர் 61 கிலோ பிரிவில் சந்தீப் டோமர் வெள்ளி வென்றார்.