பேட்டிங்கில் மீண்டும் அசத்தும் ஆஸ்திரேலியா: சதமடித்தார் கவாஜா!

இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக இரு சதங்கள் அடித்த முதல் ஆஸி. பேட்ஸ்மேன் என்கிற பெருமையை...
பேட்டிங்கில் மீண்டும் அசத்தும் ஆஸ்திரேலியா: சதமடித்தார் கவாஜா!

ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதலிரண்டு ஆட்டங்களை வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்களை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 

இந்நிலையில் தில்லியில் இன்று தொடங்கியுள்ள 5-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆஸி. அணியில் ஸ்டாய்னிஸ், நாதன் லயன் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் சாஹலுக்குப் பதிலாக ஜடேஜாவும் ராகுலுக்குப் பதிலாக ஷமியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதனால் 4-ம் நிலை வீரராக விஜய் சங்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால் ஷமியும் புவனேஸ்வர் குமாரும் ஆரம்பத்தில் பந்துவீசினார்கள். முதல் 10 ஓவர்களில் ஃபிஞ்சும் கவாஜாவும் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தார்கள். ஓரளவு நன்கு விளையாடி வந்த ஃபிஞ்ச் 27 ரன்களில் ஜடேஜாவின் அற்புதமான பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 48 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த கவாஜா, தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். அடுத்துவந்த ஹேண்ட்ஸ்காம்ப் சுழற்பந்துவீச்சாளர்களை நன்கு எதிர்கொண்டார். கோலி பல்வேறு திட்டங்கள் வகுத்தும் இருவரையும் பிரிக்கமுடியாமல் போனது. பிறகு 102 பந்துகளில் தனது 2-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் கவாஜா. கடந்த மூன்று இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள 2-வது சதம் இது. உடனே கூடுதலாக ஒரு ரன்னும் சேர்க்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கவாஜா. இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக இரு சதங்கள் அடித்த முதல் ஆஸி. பேட்ஸ்மேன் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்காம்ப் 47 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com