வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: இன்று கடைசி ஒரு நாள்

புது தில்லியில் புதன்கிழமை தொடரை கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.
பயிற்சியில் ஆஸ்திரேலிய, இந்திய அணி வீரர்கள்.
பயிற்சியில் ஆஸ்திரேலிய, இந்திய அணி வீரர்கள்.


புது தில்லியில் புதன்கிழமை தொடரை கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.
ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதலிரண்டு ஆட்டங்களை வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்களை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 
மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 358 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எடுத்தும், ஆஸி. அணி கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அஷ்டன் டர்னர் ஆகியோரின் அற்புத ஆட்டத்தில் 359 ரன்களை குவித்து வென்றது. அதிரடி வீரர்கள் ஸ்மித், வார்னர் இல்லாத நிலையிலும், ஆஸி. அணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.
கடைசி ஒரு நாள் ஆட்டம்: புது தில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. 
இந்திய அணியில் முதலில் சொதப்பிய தொடக்க வரிசை பேட்டிங் 4-ஆவது ஆட்டத்தில் மீண்டும் வழக்கமான அதிரடிக்கு திரும்பியது.
தவன் 143, ரோஹித் 95 ரன்களை குவித்தனர். தோனி இல்லாத நிலையிலும் மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த் ஒரளவு ஆடி ரன்களை குவித்தார். கடைசி வரிசையிலும் ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்தார். கேப்டன் கோலி மட்டுமே சொற்ப ரன்களில் அவுட்டானார்.
கவலை தரும் பந்துவீச்சு:
இந்திய அணியின் பந்துவீச்சு கவலை தருவதாக அமைந்துள்ளது. கிரிக்கெட் உலகமே, இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அணியே சிறந்தது என பாராட்டி வந்த நிலையில் மொஹாலியில் ஆஸி. வீரர்கள் அஷ்டன் டர்னர், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி விட்டனர். கடைசி ஓவர்களில் பந்துவீசுவதில் நிபுணர் என கூறப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சையும் பதம் பார்த்தனர். புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோரும் 10 ஓவர்களில் 60-க்கு மேல் ரன்களை வாரி தந்தனர்.
வள்ளலான சஹல்: அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல், 10 ஓவர்களில் 80 ரன்களை வள்ளல் போல் வாரித் தந்தார். கடைசி ஆட்டத்தில் சஹல் சேர்க்கப்பட மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் எனத் தெரிகிறது. மேலும் மூத்த வீரர் தோனி இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பு வெளிப்படையாக தெரிந்தது. விக்கெட் கீப்பராக செயல்பட்ட ரிஷப் பந்த் போதிய அனுபவம் இல்லாததால் ஸ்டம்பிங் வாய்ப்புகளை தவற விட்டார். அஷ்டன் டர்னர் 38 ரன்களோடு இருந்த போது, ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்யாமல் விட்டார் பந்த்.
பனி மூட்டத்தால் பாதிப்பு: ராஞ்சி மற்றும் மொஹாலியில் இந்திய அணிக்கு பனிமூட்டமும் ஒரு சவாலாக அமைந்து விட்டது. மொஹாலியில் பனி மூட்டத்தால், பந்துவீச்சாளர்களால் லகுவாக பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்களும் திணறினர்.
புது தில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதான ஆடுகளம் (பிட்ச்) மெதுவாகவும், தாழ்வாகவும் பந்து எழும்பும் தன்மை உடையது. இதில் டாஸ் வெல்வதே ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். மேலும் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசுபவர்களுக்கு பிட்ச் ஒத்துழைக்கும் எனக் கூறப்படுகிறது.
கடைசியாக இங்கு நடைபெற்ற 2 ஒரு நாள் ஆட்டங்களில் நியூஸியிடம் தோல்வியும், மே.இ.தீவுகளுக்கு எதிராக வெற்றியையும் பதிவு செய்தது இந்தியா. ஷிகர் தவன் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு நிம்மதி தருகிறது. கோலி, தவன் ஆகியோர் சொந்த மண் என்பதால் சாதிக்க முனைவர்.
உலகக் கோப்பை வாய்ப்பு: ரிஷப்பந்த், விஜய்சங்கர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் உள்ளிட்ட வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற உதவும் கடைசி வாய்ப்பாக இந்த ஆட்டம் அமைந்துள்ளதுய
புத்துணர்வுடன் ஆஸி. அணி:அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி புத்துணர்வுடன் காணப்படுகிறது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக ஆடி தொடரில் 2 ஆட்டங்களை வெல்ல உதவினார். அவரை துரிதமாக அவுட் செய்வது இந்தியாவுக்கு மிகுந்த பலனை தரும். கேப்டன் ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப், அஷ்டன் டர்னர் ஆகியோரும் இந்தியாவுக்கு அபாயத்தை விளைவிப்பவர்களாக உள்ளனர். 
பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், ஹை ரிச்சர்ட்ஸன், ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அணிகள்
இந்தியா
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், விஜய் சங்கர்,குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, யுஜவேந்திர சஹல், புவனேஸ்வர் குமார்.

ஆஸ்திரேலியா
ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஷ்டன் டர்னர், ஹை ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸம்பா, ஆன்ட்ரு டை, பேட் கம்மின்ஸ், நாதன் நைல், அலெக்ஸ் கரே, நாதன் லயன், ஜேஸன் பெஹ்ரென்டர்ப்.

ஆட்ட நேரம்: 1.30.
இடம்: பெரோஸ்ஷா கோட்லா மைதானம்: புது தில்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com