8000 ஒருநாள் ரன்கள்: சாதித்துக் காட்டிய ரோஹித் சர்மா!

முதல் ஆறு வருடங்கள் அவருக்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான வாய்ப்புகளை வீணாக்கினார். 2013-ல் தொடக்க வீரராகக் களமிறங்கிய பிறகு...
8000 ஒருநாள் ரன்கள்: சாதித்துக் காட்டிய ரோஹித் சர்மா!

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்களுக்கு வீழ்ந்தது. 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் காஜா 100 ரன்கள் விளாசினார். இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.

இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் எடுத்த இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8010 ரன்களை தொட்டுள்ளார். இந்த சாதனையை அவர் தனது 206-ஆவது ஒருநாள் போட்டியில் எட்டியுள்ளார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக 8000 ரன்கள் அடித்த 3-ஆவது வீரர் என்ற பெருமையை முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

குறைந்த இன்னிங்ஸில் 8000 ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர்கள்

175 - கோலி
182 - டி வில்லியர்ஸ்
200 - கங்குலி/ ரோஹித் சர்மா
203 - ராஸ் டெய்லர்
210 - டெண்டுல்கர்
211 - லாரா

ரோஹித் சர்மாவின் ஆரம்ப காலம் அவ்வளவு சுகமாக அமையவில்லை. முதல் ஆயிரம் ரன்களை எடுக்க அவருக்கு 43 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அடுத்த ஆயிரம் ரன்களை எடுக்க 39 இன்னிங்ஸ்! முதல் ஆறு வருடங்கள் அவருக்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான வாய்ப்புகளை வீணாக்கினார். 2013-ல் தொடக்க வீரராகக் களமிறங்கிய பிறகு ரோஹித் சர்மாவை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை. ஒருகட்டத்தில் ஆயிரம் ரன்களை (4000-5000 ரன்கள்) 16 இன்னிங்ஸில் எடுத்தார். இதுவரை அவர் 206 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 8010 ரன்களை எடுத்துள்ளார். இதில் 22 சதங்களும் 41 அரை சதங்களும் அடங்கும். 218 சிக்ஸர் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ள ஒரே வீரர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. 

ரோஹித் சர்மா - 8000 ஒருநாள் ரன்கள்

43 இன்னிங்ஸ் - முதல் 1000 ரன்கள்  
39 இன்னிங்ஸ் - 1000 - 2000 ரன்கள்  
21 இன்னிங்ஸ் - 2000 - 3000 ரன்கள்  
23 இன்னிங்ஸ் - 3000 - 4000 ரன்கள்  
16 இன்னிங்ஸ் - 4000 - 5000 ரன்கள்  
20 இன்னிங்ஸ் - 5000 - 6000 ரன்கள்  
19 இன்னிங்ஸ் - 6000 - 7000 ரன்கள்  
19 இன்னிங்ஸ் - 7000 - 8000 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com