ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு புகார் எதிரொலியாக பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது.
ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்


ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு புகார் எதிரொலியாக பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது.
கடந்த 2013-இல் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ஸ்ரீசாந்த், சக வீரர்கள் அங்கித் சவாண், அஜித் சண்டிலா உள்ளிட்டோர் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மூவருக்கும் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாழ்நாள் தடை விதித்தது.
கடந்த 2015-இல் ஸ்பாட் பிக்ஸிங் புகார் தொடர்பாக மூவர் மீதும் எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறி தில்லி விசாரணை நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது. மேலும் பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு தனது தரப்பு நியாயத்தை கூற அனுமதிக்காமலே இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததாக ஸ்ரீசாந்த் கூறியிருந்தார்.
பிசிசிஐ மேல்முறையீடு செய்தபோது, மீண்டும் தடையை உறுதி செய்து 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சாந்த் மனு செய்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு பிசிசிஐவிதித்த வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்க வேண்டிய புதிய தண்டனை குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்கலாம். அனைத்து புகார்களிலும் வாழ்நாள் தடை என்ற கடும் தண்டனையை பயன்படுத்தக்கூடாது. சூழ்நிலைகள் குறித்து பிசிசிஐ ஒழுங்குநடவடிக்கை குழு பரிசீலிக்கவில்லை என  தீர்ப்பில் கூறியிருந்தனர். 
மேலும் தன்னை மீண்டும் தண்டிக்கக் கூடாது என்ற ஸ்ரீசாந்த் கோரிக்கையையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
இதுதொடர்பாக ஸ்ரீசாந்த் கூறியதாவது- இந்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, விடியலை தருகிறது. எனக்கு தரப்பட்ட வாய்ப்பு வரவேற்புக்குரியது. வரும் அக்டோபர் மாதம் வரை உடல்தகுதியை பராமரித்து  கேரளத்துக்காக அடுத்த ரஞ்சி சீசனில் ஆட முடியும் என நம்புகிறேன் என்றார். 
சிஓஏ கூட்டத்தில் நடவடிக்கை: ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக பிசிசிஐ சிஓஏவின் அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவின் நகலைப் பார்த்த பின் அடுத்த கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com