புதிய கிளப் உலகக் கோப்பை: பிஃபா கவுன்சில் ஒப்புதல்

ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளின் எதிர்ப்பையும் மீறி புதிய கிளப் உலகக் கோப்பை போட்டியை நடத்த பிஃபா கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கிளப் உலகக் கோப்பை: பிஃபா கவுன்சில் ஒப்புதல்

ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளின் எதிர்ப்பையும் மீறி புதிய கிளப் உலகக் கோப்பை போட்டியை நடத்த பிஃபா கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
 பிஃபா தலைவர் இன்பேன்டினோ 24 அணிகள் இடம் பெறும் புதிய கிளப் உலகக் கோப்பை போட்டியை நடத்த வேண்டும் என தீவிரமாக இருந்தார். ஆனால் இதற்கு ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே மியாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் புதிய கிளப் உலகக் கோப்பை நடத்த அனுமதி தரப்பட்டது.
 இந்த பிரச்னை தொடர்பாக சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் கடந்த ஓராண்டாக தீவிர விவாதம் நடைபெற்று வந்தது. கன்பெடரேஷன்ஸ் கோப்பை போட்டிக்கு பதிலாக புதிய கிளப் உலகக் கோப்பை போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, யுஇஎஃப்ஏ-பிஃபா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதற்கிடையே பிஃபா கவுன்சில் ஒப்புதல் அளித்த சிறிது நேரத்திலேயே ஐரோப்பிய கிளப் அசோசியேஷன் இணைந்து புதிய கிளப் உலகக் கோப்பையில் ஐரோப்பிய அணிகள் பங்கேற்காது என அறிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பிஃபா தலைவர் இன்பேன்டினோ கூறுகையில்-ஒப்புதல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. கருத்து வேறுபாடுகளை பேசி தீர்வு காண முடியும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இதில் உலகின் தலைசிறந்த அணிகள் பங்கேற்கும். இதனால் பிஃபாவுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றார்.
 வரும் 2024-ஆம் ஆண்டில் புதிய கால்பந்து அட்டவணை தயார் ஆகும் வரை காத்திருக்கலாம் என ஐரோப்பிய அணிகள் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 2022 உலகக் கோப்பை அணிகளை உயர்த்தும் விவகாரம்
 மேலும் 2022 உலகக் கோப்பையில் அணிகள் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்துவது குறித்தும் பிஃபா கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கத்தார் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதால், அது நீக்கப்பட்டால் தான் சவுதி அரேபியா. யுஏஇ, பஹ்ரைன் போன்ற நாடுகளை போட்டிகளை நடத்த வாய்ப்பு தரமுடியும். அதே நேரத்தில் குவைத், ஓமனில் கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டும்.
 போட்டிகளை நடத்த புதிய நாடுகள் தேர்வு செய்யப்பட்டால் அவற்றின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆராய வேண்டும் எனவும் கூறப்பட்டது. 48 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பையை நடத்துவது பெரிய சவாலான செயலாகும்.
 வரும் ஜூன் மாதம் பாரிஸில் 211 பிஃபா உறுப்பினர்கள் பங்கேற்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் தான் புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் எனக் கருதப்படுகிறது.
 கத்தார் எதிர்ப்பு
 இதற்கிடையே 2022 உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், அணிகள் உயர்த்துவதில் சில பிரச்னைகள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 32 அணிகள் இடம் பெறும் போட்டியாகவே 2022 உலகக் கோப்பையை நடத்த விரும்புவதாக கத்தார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com