பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார்.
IPL 2019 RR vs KXIP
IPL 2019 RR vs KXIP


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார்.
முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன. 
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.  
ஆரம்பமே அதிர்ச்சி
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் தரப்பில் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் களமிறங்கினர். எனினும் ராகுல் 4 ரன்களோடு தவல்குல்கர்னி பந்துவீச்சில் அவுட்டானார். அதன் பின்பு கெயில்-மயங்க் அகர்வால் இணைந்து ரன்களை விளாசினர். இதனால் 8 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 50-ஐ கடந்தது. 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ரன்களை சேர்த்த மயங்க், கிருஷ்ணப்ப கெளதம் பந்தில் அவுட்டானார். அதன் பின் சர்ப்ராஸ் கான் களமிறங்கி கெயிலுடன் இணைந்து ரன்களை சேர்த்தார். 
கிறிஸ் கெயில் ரன் மழை
அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 46 பந்துகளில் 79 ரன்களை எடுத்திருந்த போது, பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களுடன் எடுத்திருந்தது பஞ்சாப்.
அதன்பின் சர்ப்ராஸ் கான்-நிக்கோலஸ் பூரன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில், 12 ரன்கள் எடுத்த நிக்கோலஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது பஞ்சாப்.
கடைசி பந்தில் சிக்ஸருடன் நிறைவு செய்தார் சர்ப்ராஸ் கான். 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 46 ரன்களுடனுன் சர்ப்ராஸும், 5 ரன்களுடன் மந்தீப் சிங்கும் அவுட்டாகாமல் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2-48, தவல் குல்கர்னி, கெளதம் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ராஜஸ்தான் ரன் குவிப்பு
185 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். 4 பவுண்டரியுடன் 27 ரன்களை எடுத்த ரஹானே, அஸ்வின் பந்தில் போல்டானார். 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்தார் அஸ்வின். அவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களுக்கும், சஞ்சு சாம்சன் 30 ரன்களுக்கும் சாம் கர்ரன் பந்தில் அவுட்டாயினர். சிக்ஸருடன் கணக்கைத் தொடங்கி பென் ஸ்டோக்ஸும், 1 ரன் எடுத்த நிலையில் ராகுல் திரிபாதியும், முஜிப்பூர் ரஹ்மான் பந்தில் அவுட்டானார்கள். அப்போது 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களையே  எடுத்திருந்த ராஜஸ்தான், 12 பந்துகளில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில் திணறிக் கொண்டிருந்தது. 
ஜோப்ரா ஆர்ச்சர் 2, உனதிகட் 1 ரன்னிலும் அவுட்டானார்கள். ஷிரேயஸ் கோபால் 1, குல்கர்னி 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களையே ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது.
பஞ்சாப் தரப்பில் கர்ரன் 2-51, முஜிப்பூர் 2-31, ராஜ்புத் 2-33 விக்கெட்டை வீழ்த்தினர்.

4000 ரன்களை கடந்தார் கெயில்
ஐபிஎல் போட்டிகளில் ஏற்கெனவே சுரேஷ் ரெய்னா 5000 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் 113 ஆட்டங்கள் மூலம் 4000 ரன்களை கடந்துள்ளார். இதில் 292 சிக்ஸர்களும் அடங்கும்.

சுருக்கமான ஸ்கோர்
பஞ்சாப்
கிறிஸ் கெயில் 79, சர்ப்ராஸ் கான் 46,
பந்துவீச்சு:
பென் ஸ்டோக்ஸ் 2-48.
ராஜஸ்தான்
20 ஓவர்களில் 170/9
ஜோஸ் பட்லர் 69, 
சஞ்சு சாம்சன் 30.
பந்துவீச்சு: 
கர்ரன்: 2-51, முஜிப்பூர் 2-31, ராஜ்புத் 2-33.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com