ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் சிஎஸ்கே: தில்லி அணியுடன் இன்று மோதல்

ஐபிஎல் குவாலிஃபையர் 2இல் தில்லி கேபிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.
பயிற்சியில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா.
பயிற்சியில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா.


ஐபிஎல் குவாலிஃபையர் 2இல் தில்லி கேபிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, இறுதிச்சுற்றுக்குள் நுழையும்.
ரன் ரேட் அடிப்படையில் தில்லியை 3ஆவது இடத்துக்கு தள்ளி 2ஆவது இடத்தில் 18 புள்ளிகளுடன் உள்ளது சிஎஸ்கே.
விசாகப்பட்டினத்தில் ஏற்கெனவே விளையாடி வெற்றி பெற்ற அனுபவத்துடன் களமிறங்குகிறது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி அணி.
கடந்த 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 80 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தியது.
தில்லியில் கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்திலும், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி அணியை வீழ்த்தியிருந்தது.
இருப்பினும், அந்த அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை பிருத்வி ஷாவும், ரிஷப் பந்தும் வெளிப்படுத்தினர்.
பிருத்வி ஷா, 38 பந்துகளில் 56 ரன்களும், ரிஷப் பந்த் 21 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தார்.
இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்திலும் விஸ்வரூபம் எடுக்கக் கூடும் என்பதால் எதிரணி கவனமாக இருக்க வேண்டும்.
டிரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். 
அணியில் ரபாடா இல்லாத குறையை நிவர்த்தி செய்து வருகின்றனர் இந்த வேகப்பந்து வீச்சாளர்கள். கீமோ பாலும் சிறப்பாக பந்து வீசி ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைச் சந்தித்து வருவதால் அதிருப்தியில் இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி,  தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பெரிதும் எதிர்பார்ப்பார் என்பதில் சந்தேகமில்லை. 
ஹைதராபாத் அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களைக் குவித்தார்.
எனினும்,  சில ஆட்டங்களில் அவர் சோபிக்க தவறிவிட்டார்.
3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கேவை வீழ்த்தினால் முதன்முதலாக தில்லி அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இறுதிச்சுற்றில் மும்பை அணியை எதிர்கொள்ளப்போவது சிஎஸ்கேவா அல்லது தில்லியா என்பது வெள்ளிக்கிழமை இரவு தெரிந்துவிடும்.

சிக்ஸர் அடிப்பது கைவந்த கலை
தனக்கு சிக்ஸர் அடிப்பது கைவந்த கலை என்று தில்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்தார்.


ஹைதராபாத் அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 21 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார் ரிஷப் பந்த். 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை இந்த ஆட்டத்தில் அவர் விளாசியிருந்தார்.
இதில், தில்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிஷப் பந்த் பேசியதாவது:
டி20 ஆட்டங்களில் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேர்க்க வேண்டும். அதனால், பந்துவீச்சாளர்கள் எந்த வகையில் பந்துவீசினாலும் அதை விளாச வேண்டும். அதற்காகவே தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நான் பந்து வரும் நேரத்தை மட்டும் கணித்து விளையாடினேன். அதிகம் மெனக்கெடவில்லை. நேர்மறையாக சிந்தித்தேன். உங்கள் மனநிலை எதிர்மறையாக சிந்திக்கும் படியாக இருந்தால், ஆட்டத்துக்கு அது உதவாது என்றார் ரிஷப் பந்த். அவர், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இடம்: விசாகப்பட்டினம்
நேரம்: இரவு 7.30 மணி
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com