பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்:  24ஆவது கிராண்ட்ஸ்லாம் வெல்வாரா செரீனா?

ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஜூன் 9ஆம் தேதி பிரெஞ்ச் ஓபன்  நிறைவு பெறுகிறது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்:  24ஆவது கிராண்ட்ஸ்லாம் வெல்வாரா செரீனா?

ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஜூன் 9ஆம் தேதி பிரெஞ்ச் ஓபன்  நிறைவு பெறுகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் சர்வதேச தரவரிசையில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையும், தற்போது 10 ஆவது இடத்தில் உள்ளவருமான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ஸ்பெயின் வீராங்கனை முகுருசா,  செரீனா வில்லியம்ஸனின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். ஆடவர் பிரிவில் ரஃபேல் நடால் (ஸ்பெயின்), ஜோகோவிச் (செர்பியா), ஃபெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் தீம் (ஆஸ்திரியா) உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். 

நடால்

இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ரபேல் நடால், களிமண் தரையான பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 11 முறை (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வேறு எந்தவொரு வீரரும் இதுவரை படைக்காத சாதனை இது. களிமண் தரையில் ராஜா என்ற அழைக்கப்படும் நடால், கடந்த ஆண்டைப் போல இந்த முறையும் பட்டத்தை தன்வசப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 


செரீனா வில்லியம்ஸ்

இதுவரை மொத்தம் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சாதனை வீராங்கனை.

பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை (2002, 2013, 2015) வென்றுள்ளார்.

இவரது புயல் வேக சர்வ்களுக்கு எதிராளி ஈடுகொடுப்பது கடினமாகும்.ஆஸ்திரேலியன் ஓபனில் 7 முறையும், விம்பிள்டன் ஓபனில் 7 முறையும், அமெரிக்க ஓபனில் 6 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கர்ப்பமாக இருந்ததால் சில காலம் விளையாடமல் இருந்தார். தாயான பின்னர் மீண்டும் களத்தில் குதித்து போட்டிகளில் பங்கேற்று வரும் செரீனா, 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும்  முனைப்புடன் விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஒஸாகா 

இதுவரை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றதில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க ஓபனிலும் பட்டம் வென்றுள்ளார். தொடர்ந்து இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள இவர், மூன்றாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குவார்.

ஏஞ்சலிக் கெர்பர்

ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர், இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியன் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபனில் வென்றுள்ள கெர்பர், பிரெஞ்ச் ஓபனை முதல் முறையாக கைப்பற்ற வேண்டும் என்று தீவிரம் காட்டுவார். சர்வதேச தரவரிசையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் 5ஆவது இடத்தில் உள்ளார்.


வீனஸ் வில்லியம்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயது மூத்த வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபனை பொறுத்தவரை 1999, 2010 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாகியுள்ளார்.
இளம் வீராங்கனைகளுடன் மல்லுக்கட்ட களமிறங்கியுள்ள துணிச்சலே இவரது பலம்.


சிமோனா ஹாலெப்

ருமேனியாவைச் சேர்ந்த 27 வயது வீராங்கனை சிமோனா ஹாலெப். தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் 3ஆவது இடத்தில் உள்ள இவர், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் ஆனார்.
இந்த முறையும் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார்.

ரோஜர் ஃபெடரர்

அனுபவம் மிக்க மூத்த வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்துள்ளார். 
ஆஸி. ஓபனில் 6 முறையும், விம்பிள்டன் ஓபனில் 8 முறையும், அமெரிக்க ஓபனில் 5 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் ஒரே ஒரு முறை (2009) மட்டுமே ஃபெடரர் சாம்பியன் ஆனார். இவர், நடாலுக்கும், ஜோகோவிச்சுக்கும் கடும் சவாலாக விளங்குவார். 
சாம்பியன் ஆகவும் அதிக வாய்ப்புள்ளது. 

ஜோகோவிச்

செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இதுவரை வென்று சாதனை படைத்துள்ளார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இவர், பிரெஞ்ச் ஓபனில் ஒரு முறை (2016) மட்டுமே வென்றுள்ளார். 
ஆஸி. ஓபனில் 7 முறையும், விம்பிள்டனில் 4 முறையும், அமெரிக்க ஓபனில் 3 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 
தரவரிசையில் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தில் உள்ள நடாலும், ஃபெடரரும் இவருக்கு கடும் போட்டியாக இருப்பார்கள்.

டொமினிக் தீம்

ஆஸ்திரியாவைச் சேர்ந்த 25 வயது இளம் வீரரான டொமினிக் தீம், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறி, நடாலிடம் தோல்வியுற்றார். இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இவர் வென்றதில்லை. 
இந்த முறை பிரெஞ்ச் ஓபனை வென்றே தீர வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

முகுருஸா

ஸ்பெயின் வீராங்கனை முகுருசா. 25 வயது இளம் வீராங்கனையான இவர், பிரெஞ்ச் ஓபன் (2016), விம்பிள்டன் ஓபன் (2017) பட்டம் வென்றுள்ளார்.
ஆஸி. ஓபன், அமெரிக்க ஓபனில் இதுவரை வென்றதில்லை.
2ஆவது முறையாக பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் ஆவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com