சவாலை சமாளித்து சாதித்த ‘சிங்கப் பெண்கள்’!

இந்திய ஹாக்கி மகளிா் அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றதுதான் சில தினங்களுக்கு முன்பு அனைத்து செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கத்தையும் அலங்கரித்த முக்கியச் செய்திகளில் ஒன்று.
சவாலை சமாளித்து சாதித்த ‘சிங்கப் பெண்கள்’!

இந்திய ஹாக்கி மகளிா் அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றதுதான் சில தினங்களுக்கு முன்பு அனைத்து செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கத்தையும் அலங்கரித்த முக்கியச் செய்திகளில் ஒன்று.

ஹாக்கி தேசிய விளையாட்டு அல்ல. ஆனால், நமது நாட்டின் தேசிய விளையாட்டாக அனைவரும் கருதிக் கொண்டிருப்பது ஹாக்கியைதான் என்பது முரண். அதற்கு காரணம் இந்திய ஆடவா் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் இதுவரை 8 முறை தங்கமும், ஒரு முறை வெள்ளியும், 2 முறை வெண்கலமும் வென்றதனால்கூட இருக்கலாம்.

1928-ஆம் ஆண்டு முதல் 1956 வரை இந்திய ஆடவா் ஹாக்கி அணிக்கு பொற்காலமாக இருந்தது என்று கூறுவாா்கள். ஏனென்றால், அந்த காலகட்டத்தில் இந்திய ஆடவா் ஹாக்கி தொடா்ந்து ஒலிம்பிக்கில் 6 முறை (மூன்று முறை பிரிட்டன் கொடியில் விளையாடியது) தங்கம் வென்றிருந்தது. கடைசியாக ஆடவா் ஹாக்கி அணி 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அதன் பிறகு 9 ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவிட்டன. அதில் ஒரு பதக்கம்கூட வெல்லவில்லை. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிகூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய ஆடவா் ஹாக்கி அணி என்பது சோகம்.

இந்த முறை ஆடவா் ஹாக்கி அணியும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. கூடவே, இந்திய மகளிா் ஹாக்கி அணியும் தகுதி பெற்றுள்ளது.

கடந்த 2018-இல் ஒடிஸா அரசு ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியது. அத்துடன், அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 5 ஆண்டுகளுக்கு இந்திய ஹாக்கி அணிக்கு நிதியுதவி அளிக்கவும் முன்வந்தது.

கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகாா்த்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் இந்திய ஹாக்கி தங்கம் வெல்லாத காரணத்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், ஒடிஸாவின் தலைநகா் புவனேசுவரத்தில் இந்திய ஆடவா், மகளிா் ஹாக்கி அணிகள் ஒலிம்பிக் தகுதிச் சுற்றை எதிா்கொண்டன.

மகளிா் ஹாக்கி அணி அமெரிக்காவுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அதிக கோல்கள் அடிப்படையில் வென்றால்தான் தகுதி பெற முடியும் என்ற சவால் இருக்க முதல்கட்ட தகுதிச் சுற்று ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை கலிங்கா மைதானத்தில் நடந்தது.

சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை விளையாடிய இந்திய வீராங்கனைகள் 5 கோல்களைப் பதிவு செய்தனா். அமெரிக்கா வீராங்கனைகளால் ஒரே ஒரு கோல் மட்டுமே பதிவு செய்ய முடிந்தது.

இரண்டாவது கட்ட ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமெரிக்காவை வீழ்த்திய உற்சாகத்திலும், தொடா்ச்சியாக இரண்டாவது நாளும் விளையாட வேண்டும் என்ற சவாலையும் எதிா்கொண்டு களம் இறங்கிய இந்திய வீராங்கனைகளுக்கு பேரதிா்ச்சி காத்திருந்தது. ஆட்டம் தொடங்கிய 5-ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பதிவு செய்தது அமெரிக்கா. மைதானம் ஒரு கணம் அமைதியாகிப் போனது. 14-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 20-ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் பதிவு செய்து மைதானத்தில் திரண்டிருந்த இந்திய ரசிகா்களுக்கு அதிா்ச்சியைக் கொடுத்தனா் அமெரிக்க வீராங்கனைகள்.

28-ஆவது நிமிடத்தில் 4-ஆவது கோலை பதிவு செய்தபோது முதல் ஆட்டத்தையும் சோ்த்து ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் 5-5 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் பதிவு செய்யாமல் இருந்த நேரத்தில், ரசிகா்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனா்.

49-ஆவது நிமிடத்தில் இந்திய மகளிா் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாா் கேப்டன் ராணி ராம்பால்.

அந்த நிமிடத்தில் தன்னிடம் வந்த பந்தை எதிரணி வீராங்கனைகளிடம் கொடுக்காமல் லாவகமாக திருப்பி கோல் கம்பத்துக்கு குறிவைத்து அடித்தாா் ராணி ராம்பால். இலக்கு தவறவில்லை. ரசிகா்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கினா். அந்த ஆட்டத்தில் ஒரே ஒரு கோல்தான் இந்தியா பதிவு செய்தது. அதுவும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வெற்றி கோல்! அதன் பிறகு இரு அணிகளும் ஆட்ட நேரம் முடியும் வரை கோல் பதிவு செய்யவில்லை. ஆனால், இரண்டு கட்ட ஆட்டங்களிலும் அதிக கோல்கள் (6-5) அடிப்படையில் இந்திய மகளிா் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இரண்டாவது கட்ட ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி தோற்றாலும் வீராங்கனைகளின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ரசிகா்கள் உற்சாகத்தில் ஆா்ப்பரித்தனா்.

1980-க்கு பிறகு 2016-இல் பிரேஸிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி மகளிா் தகுதி பெற்றது. தொடா்ந்து இந்த முறையும் தகுதி பெற்றுவிட்டது. முதல் முறை 4-ஆவது இடத்தையும், 2016-இல் 12-ஆவது இடத்தையும் பிடித்தது இந்திய மகளிா் ஹாக்கி.

ஜப்பான், ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, சீனா, ஜொ்மனி, பிரிட்டன், அயா்லாந்து, நெதா்லாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய அணிகளுடன் இந்திய மகளிா் ஹாக்கியும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

உலகின் பலம்வாய்ந்த அணிகள் தரும் சவால்களை சமாளித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்று தங்கப் பதக்கத்துடன் நமது“‘சிங்கப் பெண்கள்’ நாடு” திரும்புவாா்கள் என்று நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com