நியூஸிலாந்துக்கு மீண்டும் கைகொடுக்காத சூப்பர் ஓவர்: டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வென்றது.
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்


நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வென்றது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் 4 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில், தொடரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. 

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து போடப்பட்ட டாஸில் இங்கிலாந்து கேப்டன் மார்கன் வெற்றி பெற்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இருந்தபோதிலும் ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், டி20 ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்துக்கு மார்டின் கப்தில் மற்றும் கோலின் முன்ரோ மிரட்டலான தொடக்கத்தை தந்தனர். கப்தில் சிக்ஸர்களாக பறக்கவிட்டு 19 பந்தில் தனது அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அடில் ரஷித் சுழலில் சிக்கினார். இவர் 20 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் எடுத்தார். 

தொடர்ந்து களமிறங்கிய டி கிராண்ட்ஹோம் சொதப்பினாலும், அவருக்குப் பின் களமிறங்கிய செஃபெர்ட் அதிரடியாக விளையாடினார். இந்நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே செஃபெர்ட்டும் 16 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து பேட்டிங்:

66 பந்துகளில் 147 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பாண்டன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சௌதி வீசிய அடுத்த ஓவரில் ஜேம்ஸ் வின்ஸ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் மார்கன் பேர்ஸ்டோவுடன் இணைந்து அதிரடி காட்டினார். வந்த வேகத்தில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்த அவர் 7 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, சாம் கரன் ஒத்துழைப்பு தர பேர்ஸ்டோவ் மிரட்டத் தொடங்கினார். இங்கிலாந்து பங்குக்கு ஆக்லாந்தில் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட பேர்ஸ்டோவ் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 47 ரன்கள் எடுத்தார். இவர் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 47 ரன்கள் தேவைப்பட்டது. 

இதையடுத்து, இங்கிலாந்து அணி அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியில் கவனமாக இருந்தது. இதனால், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை ஜேம்ஸ் நீஷம் வீசினார். முதலிரண்டு பந்தில் 3 ரன்கள் கிடைக்க 3-வது பந்தில் டாம் கரன் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் களமிறங்கிய ஜோர்டன் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இதனால், கடைசி பந்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பந்தில் ஜோர்டன் பவுண்டரி அடிக்க ஆட்டம் சமனில் முடிந்தது.

சூப்பர் ஓவர்:

உலகக்கோப்பை தொடருக்குப் பின் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் மீண்டும் ஒரு சூப்பர் ஓவரில் மோதின. இங்கிலாந்து சேஸிங் செய்ததால் சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு பேர்ஸ்டோவ் மற்றும் கேப்டன் மார்கன் களமிறங்கினர். நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சௌதி பந்துவீசினார். 

முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 1 ரன் எடுக்க, 2-வது பந்தில் மார்கன் சிக்ஸர் அடித்தார். இதன்பிறகு, 3-வது பந்தில் மார்கன் 1 ரன் எடுக்க 4-வது பந்தில் பேர்ஸ்டோவ் சிக்ஸர் அடித்தார். இதையடுத்து, கடைசி 2 பந்துகளில் இருவரும் 3 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம், இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 17 ரன்கள் குவித்தது.

18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணிக்காக செஃபெர்ட் மற்றும் கப்தில் களமிறங்கினர். முதல் பந்தில் செஃபெர்ட் 2 ரன்கள் எடுக்க, ஜார்டன் அடுத்த பந்தை வைடாக வீசினார். இதையடுத்து, மீண்டும் வீசப்பட்ட 2-வது பந்தில் செஃபர்ட் பவுண்டரி அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 4-வது பந்தில் மார்கனின் அற்புதமான கேட்ச்சால் அவர் ஆட்டமும் இழந்தார்.

இதனால், கடைசி 2 பந்தில் 11 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதில், கப்தில் ஒரு ரன்னும், டி கிராண்ட்ஹோம் 1 ரன்னும் எடுக்க இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-2 என கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com