2-வது இரட்டைச் சதமெடுத்த மயங்க் அகர்வால்: 2-ம் நாளின் முடிவில் இந்தியா 493/6

ஒரே நாளில் 88 ஓவர்களில் 407 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. முதல் நாள் போலவே 2-ம் நாளும் இந்திய அணிக்கு மிகவும் சாதகமாக
2-வது இரட்டைச் சதமெடுத்த மயங்க் அகர்வால்: 2-ம் நாளின் முடிவில் இந்தியா 493/6

ஒரே நாளில் 407 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோல ஒரே நாளில் 400 ரன்களை இந்திய அணி எடுத்திருப்பது இது 3-வது தடவை. 2-ம் நாளின் முடிவிலேயே முதல் இன்னிங்ஸில் 343 ரன்கள் முன்னிலை பெற்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி.  

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 

இந்தியப் பந்துவீச்சாளா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 26 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்திருந்தது.

மயங்க் அகர்வாலும் புஜாராவும் மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய நாளை தொடங்கினார்கள். 68 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் புஜாரா. எனினும் இன்று, நன்கு விளையாடி வந்த புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இந்த டெஸ்டில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா நேற்று 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல விராட் கோலியும் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு பந்துகள் மட்டும் எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். டிஆர்எஸ் முறையில் அவரை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் பந்துவீச்சாளர் அபு ஜெயத். 

இதன்பிறகு மயங்க் அகர்வாலும் ரஹானேவும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். மயங்க் அகர்வால் 98 பந்துகளில் அரை சதமெடுத்தார். 

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 91, ரஹானே 35 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு,  183 பந்துகளில் சதமடித்தார் மயங்க் அகர்வால். இது அவருடைய 3-வது சதம். 28 வயது மயங்க் அகர்வால், இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 3 சதங்கள், 3 அரை சதங்களை எடுத்துள்ளார். 12 இன்னிங்ஸ்களில் ஆறு முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 

65-வது ஓவரில் மயங்க் - ரஹானே கூட்டணி 100 ரன்களை எட்டியது. அடுத்ததாக, தனது 21-வது டெஸ்ட் அரை சதத்தைப் பதிவு செய்தார் ரஹானே. கடந்த 9 இன்னிங்ஸ்களில் அவர் ஆறு முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். திடீரென 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 234 பந்துகளில் 150 ரன்களை எடுத்தார் மயங்க் அகர்வால். அப்போது மயங்க், இரட்டைச் சதம் அடிக்கவேண்டும் என்று ஓய்வறையிலிருந்து சைகை செய்தார் கோலி. நிச்சயமாக எனப் பதில் அளித்தார் மயங்க். 

2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 84 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 156, ரஹானே 82 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, 86 ரன்களில் அபு ஜெயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜடேஜா களமிறங்கினார். 99-வது ஓவரில் சிக்ஸர் அடித்து இரட்டைச் சதமெடுத்தார் மயங்க் அகர்வால். இது அவருடைய 2-வது இரட்டைச் சதம். 8 டெஸ்டுகளில் 12 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். 

ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 டெஸ்டுகளிலும் 76, 42, 77 என அதிக ரன்கள் குவித்து ஆச்சர்யப்படுத்தினார் மயங்க் அகர்வால். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்டுகளில் ஒரு அரை சதம் மட்டும் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்டுகளில் மீண்டும் ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். முதல் டெஸ்டில் இரட்டைச் சதமும் 2-வது டெஸ்டில் சதமும் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். இப்போது வங்கதேசத்துக்கு எதிராக மற்றுமொரு இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

இரட்டைச் சதமெடுத்த பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மயங்க் அகர்வால். அவருடைய சிக்ஸர்களை ரசிகர்கள் கொண்டாடினார்கள். முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 330 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகளுடன் 243 ரன்களில் ஹசன் மிர்சா பந்துவீச்சில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய சஹா, 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அஸ்வினுக்குப் பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்கினார். அவருடைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய வீரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அதேபோல 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து அனைவரையும் குஷிப்படுத்தினார் உமேஷ் யாதவ். இன்றைய நாளின் கடைசி 10 ஓவர்களில் இந்திய அணிக்கு 97 ரன்கள் கிடைத்தன. 

2-ம் நாளின் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 60, உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 343 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

ஒரே நாளில் 88 ஓவர்களில் 407 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. முதல் நாள் போலவே 2-ம் நாளும் இந்திய அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது. இதன்மூலம் இந்த டெஸ்டின் வெற்றிக்கான அடித்தளம் பலமாக அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com