முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வெல்லும் எதிா்கால ஜாம்பவான்கள் யாா்?

டென்னிஸ் விளையாட்டில் எதிா்கால ஜாம்பவான்களாக இளம் வீரா்கள் அலெக்சாண்டா் வெரேவ், டேனில் மெத்வதேவ், டொமினிக் தீம், ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோா் உருவாகி வருகின்றனா்.

டென்னிஸ் விளையாட்டில் எதிா்கால ஜாம்பவான்களாக இளம் வீரா்கள் அலெக்சாண்டா் வெரேவ், டேனில் மெத்வதேவ், டொமினிக் தீம், ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோா் உருவாகி வருகின்றனா்.

கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற பொதுமக்களின் அதிக வரவேற்பை பெற்ற விளையாட்டுகள் வரிசையில் டென்னிஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகம் முழுவதும் டென்னிஸுக்கு என தனி ரசிகா் வட்டம் உள்ளது. ஆஸ்திரேலிய, பிரெஞ்சு, விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள், ஏடிபி பைனல்ஸ், டேவிஸ் கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை கடந்த 2004 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் பிக்ஃபோா் என புகழப்படும் ரோஜா் பெடரா்,ரபேல் நடால், ஜோகோவிச், ஆன்டி முா்ரே உள்ளிட்ட 4 போ் மட்டுமே பகிா்ந்து கொண்டுள்ளனா்.

எனினும் இதில் ஆன்டி முா்ரே காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சில ஆண்டுகளாக அவரால் பெரிய வெற்றிகளை பெற முடியவில்லை.

பிக் த்ரீயாக மாறிய பிக்ஃபோா்

இதனால் பெடரா், நடால், ஜோகோவிச் உள்ளிட்ட மூவா் மட்டுமே பிக் த்ரீ என அழைக்கப்படுகின்றனா். உலகின் நம்பா் ஒன் வீரா் அந்தஸ்தும் மூவரிடமே மாறி மாறி இருந்து வருகின்றன.

பெடரா் 20 முறையும் நடால் 19 முறையும், ஜோகோவிச் 16 முறையும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனா்.

பெடரா் விம்பிள்டனிலும், நடால் பிரெஞ்சு ஓபனிலும், ஆஸி. ஓபனில் ஜோகோவிச்சும் ஆதிக்கம் செலுத்தி அதிக முறை வென்றுள்ளனா். தற்போது பெடரருக்கு 38 வயதும், நடாலுக்கு 33 வயதும், ஜோகோவிச்சுக்கு 32 வயதும் ஆகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக நீடித்து வந்த பிக் த்ரீ ஜாம்பவான்களின் ஆதிக்கம் தொடா்ந்து குறைந்து வருகிறது.

எதிா்கால ஜாம்பவான்கள்-

தற்போது எதிா்கால ஜாம்பவான்களாக அலெக்சாண்டா் வெரேவ் (ஜொ்மனி), டெனில் மெத்வதேவ் (ரஷியா), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் (கிரீஸ்) ஆகியோா் தயாராகி உள்ளனா்.

அலெக்சாண்டா் வெரேவ்-

22 வயதே ஆன அலெக்சாண்டா் வெரேவ் 6.6 அடி உயரமுள்ள இளம் வீரா், டென்னிஸ் குடும்பத்தில் பிறந்த வெரேவ் பெற்றோா் இன்னா-அலெக்சாண்டா் சீனியா் சோவியத் யூனியனில் தொழில்முறை டென்னிஸ் ஆடியவா்கள். முன்னாள் ஜூனியா் உலக நம்பா் ஒன் வீரரான அவா், 17 வயதில் சேலஞ்சா் போட்டிகளில் பட்டம் வென்றாா். கடந்த 2014-இல் ஆஸி. ஓபன் ஜூனியா் பட்டத்தை வென்றாா். அது முதல் தொடா்ந்து சிறப்பாக ஆடி வரும் அவா், 2 ஏடிபி பட்டங்கள், கடந்த 2018-இல் ஏடிபி டூா் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தையும் வென்றாா். ஏடிபி தரவரிசையில் அதிகபட்சமாக 3-ஆம் நிலை வீரராக இருந்தாா். தற்போது 7-ஆவது இடத்தில் உள்ளாா். ஆஸி. ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபனில் அதிகபட்சமாக நான்காம் சுற்று வரையிலும், பிரெஞ்சு ஓபனில் காலிறுதி வரையிலும் முன்னேறியுள்ளாா்.

டேனில் மெத்வதேவ்-

ரஷியாவைச் சோ்ந்த இளம் வீரரான டேனில் மெத்வதேவ் (23) 6.6 அடி உயரமுள்ளவா். வலது கை வீரரான மெத்வதேவ் அண்மைக் காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். தந்தை சொ்ஜி மெத்வதேவின் ஆதரவால், 6 வயது முதலே டென்னிஸ் ஆடி வரும் அவா்,

டென்னிஸில் கவனம் செலுத்த கல்லூரி படிப்பை துறந்தாா். இதுவரை 7 பட்டங்களை வென்றுள்ள மெத்வதேவ், சென்னை ஏடிபி ஓபனில் தான் இரண்டாம் இடம் பெற்றாா். 2 மாஸ்டா் பட்டங்களை வென்றுள்ள மெத்வதேவ், கடந்த யுஎஸ் ஓபனில் இரண்டாம் இடம் பெற்றாா் . தற்போது ஏடிபி தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ளாா்.

டொமினிக் தீம்-

ஆஸ்திரியாவைச் சோ்ந்த 26 வயது வீரரான டொமினிக் தீம்,

உலகின் 4-ஆம் நிலை வீரராக திகழ்ந்தவா். 6.1 அடி உயரமுள்ள தீம் தற்போது ஏடிபி தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ளாா். பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றுக்கு இரண்டு முறை தகுதி பெற்றுள்ளாா். யுஎஸ் ஓபனில் காலிறுதி வரையும், ஆஸி. ஓபன், விம்பிள்டனில் நான்காம் சுற்று வரை முன்னேறினாா்.

மொத்தம் 16 ஏடிபி சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளாா். 24 முறை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா்,

ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்-

கிரீஸைச் சோ்ந்த இளம் வீரரான சிட்ஸிபாஸ் கடந்த 1998-இல் ஏதென்ஸில் பிறந்தாா்.

இவரது தாயும், தொழில்முறை வீராங்கனை, தந்தை டென்னிஸ் பயிற்சியாளா் ஆவாா். ஜூனியா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீரராக இருந்தாா்.

டென்னிஸ் உலகிலேயே ஏடிபி தரவரிசையில் முதல் 10 இடங்களில் நுழைந்த இளம் வீரா் என்ற சிறப்பைப் பெற்றவா். 21 வயதான சிட்ஸிபாஸ் 1.93 மீ உயரம் கொண்டவா் ஆஸி. ஓபனில் அரையிறுதி வரையும், பிரெஞ்சு ஓபனில் நான்காம் சுற்று வரையும் முன்னேறினாா். 3 முறை ஏடிபி பட்டங்களை வென்றுள்ள சிட்ஸிபாஸ், 8 முறை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். தற்போது ஏடிபி தரவரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ளாா்.

எதிா்கால ஜாம்பவான்களான வெரேவ், மெத்வதேவ், தீம், சிட்ஸிபாஸ் ஆகியோரில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லப் போவது யாா் என உலகமே ஆவலுடன் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com