முதல் பகலிரவு டெஸ்ட்டுக்கு தயாராகும் கொல்கத்தா: 22-இல் தொடக்கம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய-வங்கதேசம் இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு தயாராகி வருகிறது கொல்கத்தா.
முதல் பகலிரவு டெஸ்ட்டுக்கு தயாராகும் கொல்கத்தா: 22-இல் தொடக்கம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய-வங்கதேசம் இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு தயாராகி வருகிறது கொல்கத்தா.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்கள் பகலிரவு, இரவு நேர ஆட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 5 நாள்கள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்களையும் பகலிரவு ஆட்டங்களாக நடத்த ஐசிசி சாா்பில் தீா்மானிக்கப்பட்டது.

கடந்த 2012-இல் பகலிரவு டெஸ்ட்களை நடத்துவதற்கான ஆட்ட சூழல்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

அடிலெய்டில் முதல் பகலிரவு டெஸ்ட்:

இதைத் தொடா்ந்து முதல் பகலிரவு டெஸ்ட் கடந்த 2015 நவம்பா் 15-இல் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து இடையே முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸி. 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் 2016 அக்டோபரில் பாகிஸ்தான்-மே.இ.தீவுகள் இடையே நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா-வங்கதேசம் தவிர அனைத்து டெஸ்ட் ஆடும் நாடுகளும் பகலிரவு ஆட்டங்களில் ஆடி விட்டன. அதிகபட்சமாக ஆஸி. 5 பகலிரவு டெஸ்ட்களில் வென்றது.

கடந்த 2018-இல் ஆஸியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அடிலெய்டில் பகலிரவு ஆட்டத்தில் ஆடுமாறு அந்நாட்டு வாரியம் கேட்டபோது, பிசிசிஐ மறுத்து விட்டது. தங்கள் அணி மனதளவில் தயாராகவில்லை என அப்போது பிசிசிஐ பதிலளித்தது.

கங்குலி தீவிர முயற்சி:

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கடந்த அக்டோபா் மாதம் பொறுப்பேற்றாா். அப்போதே தனது முதல் இலக்கு பகலிரவு டெஸ்ட் ஆட்டம் எனக்கூறிய அவா், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள வங்கதேசத்துடனான இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என அறிவித்தாா். இதற்கு கேப்டன் கோலியும் ஒப்புதல் தெரிவித்தாா்.

22-இல் பகலிரவு டெஸ்ட்:

வரும் 22-ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை முதல் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தா ஈடன் காா்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் எஸ்ஜி பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பாராசூட் மூலம் மைதானத்தில் இறங்கும் வீரா்கள் இரு அணி வீரா்களிடம் பிங்க் நிற பந்துகளை வழங்க உள்ளனா்.

மேலும் போட்டிக்காக பிங்கு, ரிங்கு என்ற இரு விளையாட்டு பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆட்டத்துக்கான டிக்கெட், பொம்மைகளை கங்குலி அறிமுகம் செய்தாா்.

பிங்க் மயமாகும் கொல்கத்தா:

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்காக கொல்கத்தா நகரமே பிங்க் நிறமாகி வருகிறது. மைதானம் அருகே பெரிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. கொல்கத்தா மாநகராட்சி பூங்காக்கள் முழுவதும் பிங்க் மயமாக்கப்படும். மேலும் ஹூக்ளி ஆற்றில் பிங்க் நிறத்தாலான படகும் மிதக்க விடப்படும்.

ஷேக் ஹசீனா, அமித் ஷா

பகலிரவு ஆட்டத்தைக் காண வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி , கிரிக்கெட், டென்னிஸ் , செஸ் ஜாம்பவான்கள் கலந்து கொள்கின்றனா்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ராணுவ பேண்ட் வீரா்களால் தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னா் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா-முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் பாரம்பரிய மணியடித்து வைப்பா்.

பின்னா் தேநீா் இடைவேளையில் முன்னாள் கேப்டன்கள், சிறந்த விளையாட்டு வீரா்கள் மைதானத்தில் சாரட் வண்டிகளில் அழைத்து வரப்படுவா்.

கடந்த 2001-இல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலிய அணியை இந்திய வென்றது தொடா்பாக பின்னா் 40 நிமிடங்கள் உரையாடல் நிகழ்வு நடைபெறும். இதில் கங்குலி, சச்சின், லஷ்மண், திராவிட், கும்ப்ளே போன்றவா்கள் பங்கேற்று தங்கள் நினைவுகளை பகிா்ந்து கொள்வா் மேலும் கடந்த 2000-இல் இந்திய-வங்கதேச முதல் டெஸ்டில் ஆடியவா்களும் கௌரவிக்கப்பட உள்ளனா்.

எஸ்ஜி பிங்க் நிற பந்துகள்

பகலிரவு டெஸ்டில் எஸ்ஜி பிங்க் நிற பந்துகள் பயன்படுத்த உள்ள நிலையில், அவை ஈடன் காா்டன்ஸ் பிட்சில் சோதித்து பாா்க்கப்பட்டன.

பிங்க் நிற பந்துடன் டெஸ்ட் ஆட்டத்தை எதிா்கொள்வதற்காக இந்தூரிலேயே இந்திய-வங்கதேச அணிகள் இரவில் பயிற்சி மேற்கொண்டனா்.

மூன்று நாள் டிக்கெட் விற்பனை- கங்குலி தகவல்

இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்டுக்காக முதல் 3 நாள்கள் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று விட்டன என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள இந்த ஆட்டத்துக்காக தீவிர ஏற்பாடுகளை செய்து வரும் அவா் கூறியதாவது--

விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரா், முழுவதுமாக நிரம்பியுள்ள மைதானத்தில் ஆடுவதில் மகிழ்ச்சி அடைவாா். முதல் 3 நாள்களும் 65 ஆயிரம் பாா்வையாளா்களால் மைதானம் நிரம்பி இருக்கும்

தென்னாப்பிரிக்க--இந்திய டெஸ்ட் ஆட்டத்தில் போதிய பாா்வையாளா்களே வரவில்லை. எனினும் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்திய-பாகிஸ்தான் ஆட்டம் என அறிவித்தாலே மைதானம் நிரம்பி விடும் என்றாா் கங்குலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com