பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு ஹைதராபாத் அணியில் முன்னுரிமை: அசாருதீனுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பும் அம்பட்டி ராயுடு!

ஹைதராபாத் கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் காரணமாக இந்த வருட ரஞ்சிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அம்பட்டி ராயுடு.
பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு ஹைதராபாத் அணியில் முன்னுரிமை: அசாருதீனுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பும் அம்பட்டி ராயுடு!

ஹைதராபாத் கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் காரணமாக இந்த வருட ரஞ்சிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அம்பட்டி ராயுடு.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் கடந்த ஜூலை மாதம் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் அம்பட்டி ராயுடு. இந்நிலையில் மனம் மாறி தன்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு ராயுடு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியதாவது: ஓய்வு அறிவிப்பை உணர்ச்சிவசப்பட்டு அறிவித்துவிட்டேன். திறமைமிக்க ஹைதராபாத் அணியுடன் இந்த சீஸனில் விளையாட ஆவலாக இருக்கிறேன். செப்டம்பர் 10 முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன். கடினமான நேரத்தில் எனக்குத் துணையாக இருந்து, நான் இன்னமும் நிறைய விளையாடவேண்டியுள்ளது என்பதை உணர்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ், வி.வி.எஸ். லக்‌ஷ்மண், தேர்வுக்குழுத் தலைவர் நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி என்று கூறினார். ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் நோயல் டேவிட் இதுகுறித்துக் கூறியதாவது: இது நல்ல செய்தி. அவர் இன்னமும் 5 வருடங்கள் விளையாடலாம். இளைஞர்களுக்கு அவர் ஊக்கமாக இருப்பார். கடந்த வருடம் அவர் இல்லாமல் ரஞ்சிப் போட்டியில் நாங்கள் சிரமப்பட்டோம். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாட உள்ளதால் வீரர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

இதையடுத்து விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி ஆகிய இரு போட்டிகளிலும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ராயுடு செயல்பட்டார். இந்நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய விதத்தில் சில கருத்துகளைக் கூறி, இந்த வருட ரஞ்சிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ராயுடு.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்த வருடம் ரஞ்சிப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் நினைத்தது போல நடக்கவில்லை. அணியில் நிறைய அரசியல்கள் உள்ளன. கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்கான சூழலும் இல்லை. இந்நிலைமை எனக்கு அசெளகரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ட்விட்டர் வழியாக தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர வளர்ச்சி அமைச்சர் கே.டி. ராமா ராவுக்கு விடுத்த கோரிக்கையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நிலவும் ஊழலைத் தாங்கள் கவனிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

பேட்டியில் ராயுடு மேலும் கூறியதாவது: புதிய கிரிக்கெட் சங்கத் தலைவர் முகமது அசாருதீனிடம் இதுகுறித்துப் பேசினேன். தன்னாலான முயற்சிகளை எடுப்பதாக அவர் கூறினார். ஆனால் அது நடக்கவேயில்லை. கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுத்திருக்கவேண்டும். ஆனால் அப்படி அவர் செய்யவில்லை. தேர்தலுக்காக நிறைய வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இதனால் கிரிக்கெட் தான் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அளித்த வாக்குறுதிக்காகத் திறமையில்லாத வீரர்கள் சிலர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இப்படியிருந்தால் அணி எப்படி முன்னேறும்? சில வீரர்களின் தேர்வுகளைப் பொறுத்தவரை என் கைகள் கட்டப்பட்டுள்ளன.  

கிளப் செயலாளர்களின் ஆதரவினால் சில வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதனால் திறமை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. பணக்கார, செல்வாக்கு உள்ள, அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு ஹைதராபாத் அணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. இது உண்மை. இந்நிலைமையை மாற்றவேண்டும். யாராவது ஒருவர் இதைப் பற்றிப் பேசவேண்டும் என்பதால் நான் பேசுகிறேன். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் மோசமான நிலைமை நீடிக்கிறது. 

ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட அர்ஜுன் யாதவ், அப்பதவிக்குத் தகுதியில்லாதவர். பிசிசிஐயின் தற்காலிகத் தலைவராக இருந்த ஷிவ்லால் யாதவின் செல்வாக்காலும் தேர்தல் வாக்குறுதி காரணமாகவும் அவர் பயிற்சியாளராகத் தேர்வாகியுள்ளார். இதில் இரட்டை ஆதாயப் பிரச்னை உள்ளது என்றாலும் அது இதுவரை கவனிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ராயுடுவின் விலகலுக்கு அடுத்ததாக, ஹைதராபாத் அணியின் கேப்டனாக பிபி சந்தீப் தேர்வாகவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com