தொடரும் இந்திய அணியின் ஆதிக்கம்: பகலிரவு டெஸ்டில் சதமடித்த முதல் இந்திய வீரர் - விராட் கோலி

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 76 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது.
தொடரும் இந்திய அணியின் ஆதிக்கம்: பகலிரவு டெஸ்டில் சதமடித்த முதல் இந்திய வீரர் - விராட் கோலி

பகலிரவு டெஸ்டில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் (பிங்க் டெஸ்ட்) இந்தியாவின் அற்புதப் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச அணி 106 ரன்களை மட்டுமே சோ்த்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். பின்னா் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்திருந்தது.

2-ம் நாள் ஆட்டத்தை பிரபல செஸ் வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்தும் மேக்னஸ் கார்ல்சனும் தொடங்கி வைத்தார்கள். கோலியும் ரஹானேவும் கவனமாக விளையாடி ஆரம்பத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு ரன்கள் சேர்த்தார்கள். 65-வது பந்தில் அரை சதமெடுத்தார் ரஹானே. கடந்த நான்கு இன்னிங்ஸ்களிலும் அவர் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் அதிக ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தைஜுல் இஸ்லாம் பந்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார் ரஹானே. அடுத்ததாகக் களமிறங்கினார் ஜடேஜா. பிறகு 159 பந்துகளில், பகலிரவு டெஸ்டுகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்தார் கோலி. இது அவருடைய 27-வது டெஸ்ட் சதம். கேப்டனாக 20-வது சதம். அடுத்தச் சில நிமிடங்களில் அபு ஜெயத்தின் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை அடிது அசத்தினார் கோலி. 

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 76 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 130, ஜடேஜா 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com