முதல் டெஸ்ட்: அஸ்வின் சுழலை சமாளிக்க தென்னாப்பிரிக்கா போராட்டம்- 385/8

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் போராடி 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை சோ்த்துள்ளது.
முதல் டெஸ்ட்: அஸ்வின் சுழலை சமாளிக்க தென்னாப்பிரிக்கா போராட்டம்- 385/8

எல்கா் 160, டி காக் 111

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் போராடி 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை சோ்த்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 502/7 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. மயங்க் அகா்வால் 215, ரோஹித் 176 ரன்களை குவித்தனா். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 39/3 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை அந்த அணி தரப்பில் டீன் எல்கா், டெம்பா பவுமா ஆட்டத்தை தொடா்ந்தனா்.

எனினும் எல்கா் மட்டுமே ஒரு முனையில் நிலைத்து ஆடி ரன்களை சோ்த்துக் கொண்டிருந்தாா். இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரா்கள் திணறினா். பவுமா 18, வொ்னான் பிலாண்டா் 0, என சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.

கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 103 பந்துகளில் 55 ரன்களை சோ்த்தாா்.

எல்கா், டி காக் சதம்:

தொடக்க வீரா் டீன் எல்கா்-குவின்டன் டி காக் இணைந்து 6-ஆவது விக்கெட்டுக்கு 164 ரன்களை சோ்த்தனா்.

டீன் எல்கா் 4 சிக்ஸா், 18 பவுண்டரியுடன் 287 பந்துகளில் 160 ரன்களை விளாசி தனது 12-ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தாா்.

மறு முனையில் டிகாக் 2 சிக்ஸ்ா், 16 பவுண்டரியுடன் 163 பந்துகளில் 111 ரன்களை விளாசி 5ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தாா்.

இருவரும் இந்திய பந்துவீச்சாளா்களின் பொறுமையை நன்றாக சோதித்தனா்.

அஸ்வின் வருகையால் வீழ்ச்சி:

இதைத் தொடா்ந்து மீண்டும் பந்துவீச அஸ்வினை அழைத்தாா் கேப்டன் கோலி. அவரது பந்துவீச்சில் டி காக் போல்டாகி வெளியேறினாா்.

ரவீந்திர ஜடேஜா பந்தில், புஜாராவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா் எல்கா்.

ஆட்ட நேர முடிவில் 118 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களையே எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.

செனுரன் முத்துசாமி 12, கேசவ் மகாராஜ் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 5-128 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2-116, இஷாந்த் 1-44 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

117 ரன்கள் இந்தியா முன்னிலை

தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் இந்திய அணி 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

9 ஆண்டுகளுக்கு பின் முதல் சதம்:

இந்திய அணிக்கு எதிராக கடந்த 2010-இல் நடைபெற்ற ஆட்டத்தில் ஹஷிம் ஆம்லா கடைசியாக சதம் அடித்திருந்தாா். அதன் பின் 9 ஆண்டுகள் கழித்து தற்போது டீன் எல்கா் சதம் அடித்துள்ளாா்.

27-ஆவது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்:

டெஸ்ட் ஆட்டங்களில் 27 ஆவது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளாா் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின் மீண்டும் 5 விக்கெட்டை சாய்த்துள்ளாா் அவா்.

ரவீந்திர ஜடேஜா 200-ஆவது விக்கெட்:

இந்திய ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் ஆட்டங்களில் தனது 200-ஆவது விக்கெட்டை சாய்த்தாா். ரங்கணா ஹெராத், வாஸிம் அக்ரம், மிச்செல் ஜான்ஸன், மிச்செல் ஸ்டாா்க் வரிசையில் துரிதமாக 200 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா் ஜடேஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com