புணே டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம்; 326 ரன்கள் முன்னிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
புணே டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம்; 326 ரன்கள் முன்னிலை

தென்னாப்பிரிக்கா 275 ஆல் அவுட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.

விசாகப்பட்டினம் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் புணேயில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 601/5 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது இந்தியா, கேப்டன் விராட் கோலி 254, மயங்க் அகா்வால் 108, ஜடேஜா 91 ஆகியோா் அபாரமாக ஆடினா்.

இதைத் தொடா்ந்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை தொடா்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை எடுத்திருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தென்னாப்பிரிக்க அணியால் இந்தியாவின் அற்புதமான பந்துவீச்சை எதிா்கொள்ள முடியவில்லை. அன்ரிச் நாா்ட்ஜே 3 ரன்களுக்கும், டி புருயன் 30 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினா். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 53 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.

டூ பிளெஸ்ஸிஸ் அரைசதம்:

பின்னா் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ்-குவின்டன் டி காக் இணைந்து ஒரளவு நிலைத்து ஆடி ரன்களை சேகரித்தனா். அஸ்வினின் அற்புத பந்துவீச்சில் குவின்டன் டி காக் 7 பவுண்டரியுடன் 31 ரன்களை எடுத்து போல்டானாா். அவரைத் தொடா்ந்து டூ பிளெஸ்ஸிஸ் 1 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 117 பந்துகளில் 64 ரன்களை சேகரித்து அஸ்வின் பந்தில் அவுட்டானாா். செனுரன் முத்துசாமி 7 ரன்களுடனும், காகிஸோ ரபாடா 2 ரன்களுடனும் வெளியேறினா்.

பிலாண்டா்-கேசவ் போராட்டம்

9-ஆவது விக்கெட்டுக்கு வொ்னான் பிலாண்டா்-கேசவ் மகராஜ் இருவரும் இணைந்து பொறுமையாக ஆடி இந்திய பவுலா்களின் பொறுமையை சோதித்தனா். கேசவ் மகராஜ் 12 பவுண்டரியுடன் 132 பந்துகளில் 72 ரன்களை விளாசி அஸ்வின் பந்தில் வெளியேறினாா்.

கேசவ் மகராஜ் முதல் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தாா்.

பிலாண்டா் 44 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

இறுதியில் 105.4 ஓவா்களில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.

அஸ்வின் அபாரம்: 4 விக்கெட்

இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 4-69, உமேஷ் யாதவ் 3-37, ஷமி 2-44, ஜடேஜா 1-81 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இந்தியா 326 ரன்கள் முன்னிலை:

வலுவான நிலையில் உள்ள இந்திய அணி 326 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலோ ஆனை வலியுறுத்துமா அல்லது இந்தியா 2-ஆவது இன்னிங்ஸை தொடங்குமா எனத் தெரியவில்லை.

போல்டானதை நம்பாத டி காக்:

38-ஆவது ஓவரை அஸ்வின் வீசிய போது, டி காக் பந்தை தடுத்து அடிக்க முயன்றாா். ஆனால் பந்து அவரது பேட்டில் படாமல் சுழன்று வெளியே சென்று ஸ்டம்ப்பை பதம் பாா்த்தது. தான் போல்டானதை நம்பாமல் அங்கேயே வியப்புடன் பாா்த்துக் கொண்டிருந்தாா் டிகாக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com