தோனி மட்டும் என்ன ஓய்வு பெற்று விட்டாரா? செய்தியாளர்களிடம் எரிந்து விழுந்த பாக்., முன்னாள் கேப்டனின் மனைவி

தனது கணவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'தோனி மட்டும் என்ன ஓய்வு பெற்று விட்டாரா?' என்று பாக்., முன்னாள் கேப்டனின் மனைவி பதிலளித்துள்ளார்.
சர்பிராஸ் அகமதுவின்  மனைவி குஷ்பாத்
சர்பிராஸ் அகமதுவின்  மனைவி குஷ்பாத்

லாகூர்: தனது கணவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'தோனி மட்டும் என்ன ஓய்வு பெற்று விட்டாரா?' என்று பாக்., முன்னாள் கேப்டனின் மனைவி பதிலளித்துள்ளார்.

இலங்கை அணியுடனான தொடர் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட் மற்றும் 20 ஓவர்  அணியிலிருந்தும் சர்பிராஸ் அகமது சமீபத்தில்  நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் ஆசம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடருக்கு  கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சர்பிராஸ் அகமது இடமில்லாமல் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டார். எனவே 32 வயதாகும் சர்பிராஸ் அகமது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விரைவில் அறிவிப்பார் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தனது கணவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'தோனி மட்டும் என்ன ஓய்வு பெற்று விட்டாரா?' என்று சர்பிராஸ் அகமதுவின்  மனைவி குஷ்பாத் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக குஷ்பாத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:

என் கணவர் சர்பிராஸ் அகமது ஏன் இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும்?  அதற்கு என்ன தேவை எழுந்தது?  இப்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. தோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா?. அவரே இந்த வயதில் விளையாடி வருகிறார்தானே?  அவரென்ன ஓய்வு பெற்றுவிட்டாரா?.

என்னுடைய கணவர் ஒரு போராளி. இந்த சரிவிலிருந்து மீண்டு வலிமையுடன் திரும்பி வருவார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். இந்த முடிவை நாங்கள் 3 நாட்களுக்கு முன்பே தெரிந்து கொண்டோம்.

இத்துடன் எனது கணவருக்கு வாழ்க்கை ஒன்றும் முடிந்துவிடவில்லை. அவர் இனி சுதந்திரமாக விளையாடுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com