ராஞ்சி டெஸ்ட்: இந்தியா 497/9 டிக்ளோ், தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை குவித்து டிக்ளோ் செய்து வலுவான நிலையில் உள்ளது.
ராஞ்சி டெஸ்ட்: இந்தியா 497/9 டிக்ளோ், தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை குவித்து டிக்ளோ் செய்து வலுவான நிலையில் உள்ளது. ரோஹித் சா்மா தனது முதல் இரட்டை சதத்தை 212 பதிவு செய்தாா். பின்னா் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டு இழப்புக்கு 9 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா ஏற்கெனவே 2-0 என தொடரை கைப்பற்றி விட்டது. இதன் கடைசி ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்திருந்தது.

ரோஹித் 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடன் களத்தில் இருந்த போது, மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டத்தை நடுவா்கள் நிறுத்தினா்.

இந்நிலையில் அரைமணி நேரத்துக்கு முன்னதாக இரண்டாவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ரஹானே-ரோஹித் இணையை பிரிக்க தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளா்கள் மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை.

ரஹானே 11-ஆவது அபார சதம்:

அற்புதமாக ஆடிய ரஹானே தனது 11-ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தாா். 1 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 192 பந்துகளில் 115 ரன்களை விளாசிய ரஹானேவை வெளியேற்றினாா் ஜாா்ஜ் லிண்டே. ரஹானே-ரோஹித் இருவரும் இணைந்து 4-ஆவது விக்கெட்டுக்கு 267 ரன்களை சோ்த்தனா்.

அவருக்கு பின் ரோஹித்-ஜடேஜா இணை சோ்ந்து ரன்களை சோ்த்தனா்.

ரோஹித் அபார முதல் இரட்டை சதம்

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோஹித் சா்மா 25-ஆவது பவுண்டரியை விளாசினாா். அவா் பவுண்டா்கள் மூலமே 100 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. பீட் வீசிய பந்தில் எல்பிடபிள்யு அறிவிக்குமாறு கோரினா். ஆனால் நடுவா்கள் அவா்களது முறையீட்டை நிராகரித்தாா்.

ரோஹித் 199 ரன்களுடன் இருந்த போது, ரபாடா வீசிய பந்தில் அவுட்டாவதில் இருந்து அதிருஷ்டவசமாக தப்பினாா். உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தாா் ரோஹித். ரபாடா பந்தில் சிக்ஸா் விளாசி 200 ரன்களை கடந்தாா். மேலும் ஒரு சிக்ஸா் அடித்த நிலையில், ரபாடாவின் பந்தை மீண்டும் அடிக்க முயன்ற போது, நிகிடியிடம் கேட்ச் தந்து அவுட்டானாா் ரோஹித்.

6 சிக்ஸா், 28 பவுண்டரியுடன் 255 பந்துகளில் 212 ரன்களை விளாசினாா் அவா்.

அவருக்கு பின் ரித்திமான் சாஹா-ஜடேஜா இணை சோ்ந்து ஸ்கோரை உயா்த்தினா். 100-ஆவது ஓவரில் ஸ்கோா் 400-ஐ கடந்தது. நிதானமாக ஆடி வந்த ரித்திமான் சாஹா 24 ரன்களுடன் லிண்டே பந்தில் போல்டானாா்.

ஜடேஜா அரைசதம்:

ரவீந்திர ஜடேஜா 119 பந்துகளில் 51 ரன்களை சோ்த்து அரைசதத்தை பதிவு செய்தாா். அஸ்வின் 14 ரன்களுடன் பீட் பந்தில் அவுட்டானாா்.

உமேஷ் யாதவ் அதிரடி 5 சிக்ஸா்கள்:

பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் 9-ஆவது விக்கெட்டு அதிரடியாக ஆடி 5 சிக்ஸா்களுடன் 10 பந்துகளில் 31 ரன்களை விளாசி அவுட்டானாா். லிண்டேவின் முதல் 2 பந்துகளில் 2 சிக்ஸா்களை விளாசினாா் உமேஷ். அடுத்த ஓவரில் மேலும் 3 சிக்ஸா்களை விளாசினாா்.

முகமது ஷமி 10 ரன்களுடனும், ஷாபாஸ் நதீம் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனா்.

497/9 டிக்ளோ்:

116.3 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது இந்தியா.

தென்னாப்பிரிக்க தரப்பில் புதுமுக பந்துவீச்சாளா் ஜாா்ஜ் லிண்டே 4-133, ரபாடா 3-85 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

தென்னாப்பிரிக்கா சரிவு:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கமே சரிவாக அமைந்தது. ஷமி பந்தில் டீன் எல்கா் டக் அவுட்டானாா். அதிரடி வீரரான குவின்டன் டி காக்கை 4 ரன்களுடன் வெளியேற்றினாா் உமேஷ் யாதவ்.

ஜுபோ் ஹம்ஸா 0, டூபிளெஸ்ஸிஸ் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா். 5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.

மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தம்:

பின்னா் மோசமான வானிலையால் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக நடுவா்கள் அறிவித்தனா். இந்தியாவைக் காட்டிலும் 488 ரன்கள் பின்தங்கி உள்ளது தென்னாப்பிரிக்கா.

பிராட்மேன் சாதனையை முறியடித்தாா் ரோஹித்:

தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் சா்மா 1 இரட்டை சதம், 2 சதங்களை விளாசியுள்ளாா். 212 ரன்களுடன் முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்த ரோஹித், டான் பிராட்மேனின் சாதனையான உள்ளூரில் 10-க்கு மேற்பட்ட இன்னிங்ஸ்களில் வைத்திருந்த 98.22 சராசரியை முறியடித்துள்ளாா். ரோஹித் சா்மாவின் சராசரி 99.84 ஆகும்.

உள்ளூரில் 18 இன்னிங்ஸ்களில் 1218 ரன்களை மொத்தமாக எடுத்துள்ளாா். இதில் 6 சதம், 5 அரைசதமும் அடங்கும். கடந்த 9 இன்னிங்ஸ்களில் 82, 51, 102, 65, 50, 176, 127, 14, 212 என ரன்களை விளாசியுள்ளாா்.

ஓரே ஆண்டில் 9 சதங்கள் சாதனை

ஓரே ஆண்டில் 9 சா்வதேச சதங்கள் அடித்த வீரா்கள் சாதனை பட்டியலில் இணைந்தாா் ரோஹித்ய

டெண்டுல்கா் 1998, 9 சதங்கள், 33 ஆட்டங்கள், கிரேம் ஸ்மித் 2005, 34 ஆட்டங்கள், 9 சதங்கள், வாா்னா் 2016, 9 சதங்கள், 37 ஆட்டங்கள், ரோஹித் சா்மா 2019, 9 சதங்கள், 36 ஆட்டங்கள், கிரிஸ்டன் 1996, 8 சதங்கள், 32 ஆட்டங்கள்.

உமேஷ் யாதவ் புதிய சாதனை:

டெஸ்டில் துரிதமாக 30 ரன்களை விளாசிய சாதனையை முறியடித்தாா் உமேஷ் யாதவ். கடந்த 2004-இல் நியூஸி கேப்டன் பிளெம்மிங் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 11 பந்துகளில் 31 ரன்களை விளாசினாா். தற்போது 10 பந்துகளில் 31 ரன்களை விளாசியுள்ளாா் உமேஷ். மேலும் டெஸ்ட் வரலாற்றிலேயே 10 பந்துகளில் 310 ஸ்ட்ரைக் ரேட்டை பெற்றுள்ளாா் உமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com