பேட்ஸ்மேன்களைவிட நன்றாகவே பேட்டிங் செய்த டெயிலண்டர்கள்: தென் ஆப்பிரிக்காவுக்கு என்ன பிரச்னை?

இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 3-0 என முழுமையாக இழந்தது.
பேட்ஸ்மேன்களைவிட நன்றாகவே பேட்டிங் செய்த டெயிலண்டர்கள்: தென் ஆப்பிரிக்காவுக்கு என்ன பிரச்னை?


இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 3-0 என முழுமையாக இழந்தது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸைத் தவிர அடுத்து விளையாடிய 5 இன்னிங்ஸிலும் தென் ஆப்பிரிக்க அணி தனக்கே உரித்தான போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமல் சொதப்பலையே வெளிப்படுத்தியது.

இதில், குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதிலும், டெயிலண்டர்களே கௌரவமான ரன்களை அடைய நம்பிக்கையளித்தனர். 

அந்த அணியின் அனுபவ வீரர்களான டீன் எல்கர், கேப்டன் டு பிளெஸ்ஸி, குயின்டன் டி காக் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டி புரூய்ன், மார்கிரம், பவுமா ஆகியோர் ரன் குவிக்கத் திணறினர். இதில், குறிப்பாக எல்கர், டு பிளெஸ்ஸி மற்றும் டி காக் போன்ற அனுபவ வீரர்கள் ரன்களைக் குவித்து அடித்தளம் அமைத்தால்தான் அது அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு உளவியல் ரீதியாக நம்பிக்கையளிக்கும். ஆனால், அவர்கள் திணறும் போது அது மொத்த அணியையுமே பாதிப்புக்குள்ளாக்குகிறது.

அதேசமயம், இவர்களுக்கு மாறாக டெயிலண்டர்கள் பேட்டிங்கில் தங்களது அற்புதமான திறனை வெளிப்படுத்தி ஓரளவு நம்பிக்கையளித்துள்ளனர்.

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் பேட்டிங் விவரம்:
 

வீரர்கள்மொத்த இன்னிங்ஸ்ரன்கள்முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்கள்மற்ற 5 இன்னிங்ஸில் எடுத்த ரன்கள்ஒற்றை இலக்கு ரன்கள்
டீன் எல்கர்6232160723 முறை
குயின்டன் டி காக்6156111454 முறை
டு பிளெஸ்ஸி614255873 முறை
தெம்பா பவுமா696--3 முறை
எய்டன் மார்கிரம்444--3 முறை
டி புரூய்ன்582--2 முறை


இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க டெயிலண்டர்களின் பேட்டிங் விவரம்:

வீரர்கள்மொத்த இன்னிங்ஸ்ரன்கள்ஒற்றை இலக்கு
வெர்னான் பிலாண்டர்481முறை

டேன் பீட்

483முறை
செனுரான் முத்துசாமி498முறை
கேசவ் மகாராஜ்4103முறை
ஜார்ஜ் லிண்டே264-



மேற்குறிப்பிட்டுள்ள புள்ளி விவரப் பட்டியலே தென் ஆப்பிரிக்க பேட்டிங்கில்  ஏற்பட்டுள்ள சிக்கலை வெளிக்காட்டுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸைத் தவிர்த்துவிட்டால், அந்த அணியின் டெயிலண்டர்களே பேட்டிங்கில் சற்று ஆறுதல் அளித்து இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் இந்த சறுக்கலுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும், ஆடுகளங்களும் முக்கியப் பங்காற்றியுள்ளன. பொதுவாக இந்திய ஆடுகளங்களில் 4 மற்றும் 5-வது நாட்களில் பந்துகள் பெரிதளவு எழும்பாது. ஸ்லிப் திசையிலும், கீப்பருக்கும் பந்துகள் ஒரு பவுன்ஸ் ஆகிவிட்டே செல்வதை நம்மால் பலமுறை பார்க்க முடியும். ஆனால், இந்த தொடரில் வேகப்பந்துவீச்சாளர்களின் பந்து பவுன்ஸ் ஆகாமல் ரித்திமான் சாஹாவின் தலை உயரம் வரை செல்வதைப் பார்க்க முடிகிறது. உமேஷ் யாதவும், முகமது ஷமியும் இதற்கு ஏற்றார்போல் தங்களது பந்துவீச்சின் அளவையும் மாற்றிக் கொண்டனர்.

இது இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு பலனளித்தது. டெஸ்ட் தொடருக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸியும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை முக்கியக் காரணமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதற்குத் தயாராக இருந்தோம், ஆனால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே பந்துவீசினர். எங்களது பந்துவீச்சாளர்கள் 30 - 40 நிமிடங்களுக்கு நன்றாக பந்துவீசினால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஒரு நாள் முழுவதும் சிறப்பாகவே பந்துவீசினர்" என்றார்.

இந்த விஷயத்தைதான் தென் ஆப்பிரிக்க அணி அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று வந்துவிட்ட பிறகு உள்ளூர் ஆட்டம், வெளியூர் ஆட்டம் என்று காரணம் கூறமுடியாது. சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும் என்பதால், அணியில் நிலவும் பிரச்னைகளை அடுத்த தொடருக்கு முன் உடனடியாக சரிசெய்ய வேண்டும். 

தென் ஆப்பிரிக்க அணியில் அடுத்த ஆம்லா மற்றும் டி வில்லியர்ஸை உருவாக்குவதற்கு காலம் எடுக்கும் என்றாலும், சூழலுக்கு ஏற்ப அணிக்குத் தேவையான சரியான கூட்டணியை கண்டறிவது மிக முக்கியமானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com