தனக்குத்தானே பிறந்தநாள் பரிசு அளித்துக்கொண்ட டேவிட் வார்னர்: அதுவும் தரமான, சிறப்பான பரிசு!

இலங்கை அணியுடனான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தனக்குத்தானே பிறந்தநாள் பரிசு அளித்துக்கொண்ட டேவிட் வார்னர்: அதுவும் தரமான, சிறப்பான பரிசு!


இலங்கை அணியுடனான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மலிங்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அதிரடியில் மிரட்டினர். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் படிப்படியாக ஒரு ஓவருக்கு 10-ஐ தொட்டது. 10-வது ஓவரில் ரஜிதா பந்தில் சிக்ஸர் அடித்த ஃபின்ச் தனது 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அவரைத்தொடர்ந்து, அதே ஓவரில் சிக்ஸர் அடித்த டேவிட் வார்னர் தனது 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இந்நிலையில், இதற்கு அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்த ஃபின்ச், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளி 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, கிளென் மேக்ஸ்வெல் முன்னதாகவே களமிறக்கப்பட்டார்.

இந்த அதிரடியைத் தொடரும் வகையில் மேக்ஸ்வெல்லும் தனது முதல் பந்தில் இருந்தே இலங்கை பந்துவீச்சை மிரட்டத் தொடங்கினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்து வார்னரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து மிரட்டி வந்தார். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் ஓவருக்கு தொடர்ந்து 11-இல் இருந்து வந்தது.

இந்நிலையில், ரஜிதா பந்தில் சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல் தனது 22-வது பந்தில் அரைசதம் அடித்தார். இதையடுத்து, இவரும் அரைசதம் அடித்த பிறகு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார். 

இதனிடையே, டேவிட் வார்னருக்கு சதம் அடிக்க 3 பந்துகளே மீதமிருந்தது. இந்நிலையில் களமிறங்கிய டர்னர் ஒரு ரன் எடுத்து டேவிட் வார்னருக்கு ஸ்டிரைக்கைத் தந்தார். இதையடுத்து, கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர் சதத்தை எட்டினார். அவர் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 100 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 233 ரன்கள் எடுத்தது.

234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீரர்கள் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குணத்திலகா 11 ரன்களுக்கும், ராஜபக்சே 2 ரன்களுக்கும் அடுத்தடுத்த பந்துகளில் கம்மின்ஸிடம் வீழ்ந்தனர். இதனால், அந்த அணி 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த சரிவில் இருந்து இலங்கை அணியால் மீளமுடியவில்லை. வீரர்கள் அனைவரும் களத்துக்கு வந்ததும், பெவிலியனுக்கு திரும்பியதுமாகவே இருந்தனர். அந்த அணியில் அதிகபட்ச ஸ்கோரே ஷனாகா எடுத்த 17 ரன்கள் என்பதன் மூலமே ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொள்ள இலங்கை அணி திணறியது தெரிகிறது. இதனால், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் மிகப் பெரிய வெற்றியாகும்.

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் அகார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பேட்டிங்கில் சதம் அடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் பிரிஸ்பேனில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

டேவிட் வார்னர் பிறந்தநாள் பரிசு:

டேவிட் வார்னர் இன்று தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தும், அணியை வெற்றி பெறச் செய்தும், ஆட்ட நாயகன் விருதை வென்றும் தனக்குத்தானே சிறப்பான, தரமான பிறந்தநாள் பரிசை வார்னர் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com