டி20 உலகக் கோப்பைக்கு இரு புதிய அணிகள் தகுதி!

ஆறு இடங்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டி துபை மற்றும் அபு தாபியில் தற்போது நடைபெற்று வருகிறது.
டி20 உலகக் கோப்பைக்கு இரு புதிய அணிகள் தகுதி!

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி இரு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன. டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள ஆறு இடங்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டி துபை மற்றும் அபு தாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்றுப் போட்டியில் 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்றுகளின் முடிவுகளில் இரு பிரிவுகளிலும் முதலிடம் வகிக்கும் அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.

அதன் அடிப்படையில் குரூப் ஏ பிரிவில் பப்புவா நியூ கினி அணி விளையாடிய 6 ஆட்டங்களில் 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல அயர்லாந்து அணி, குரூப் பி பிரிவில் 6 ஆட்டங்களில் 4-ல் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் அடிப்படையில் பப்புவா நியூ கினி, அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

எனினும் இன்னும் நான்கு அணிகளைத் தேர்வு செய்யவேண்டியுள்ளது. இரு பிரிவுகளிலும் 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடித்துள்ள அணிகள் ஐபிஎல் பிளேஆஃப் பாணியில் போட்டியிட்டு அதில் வெல்லும் இரு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். இதன் மூலம் 4 அணிகள் டி20 உலகக் கோப்பைக்கு உறுதிபடுத்தப்படும். மீதமுள்ள இரு இடங்களுக்கு - பிளே ஆஃப்பில் தோற்ற இரு அணிகளும் இரு பிரிவுகளிலும் நான்காம் இடங்களைப் பிடித்த அணிகளுடன் ஐபிஎல் எலிமினேட்டர் பாணியில் போட்டியிட்டு, அந்த ஆட்டங்களில் வெற்றி பெறும் இரு அணிகள் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com