18 மாதத் தடையை எதிர்கொள்கிறாரா ஷகிப் அல் ஹசன்?: வங்கதேச கிரிக்கெட்டில் பரபரப்பு

இரு வருடங்களுக்கு முன்பு, சர்வதேச ஆட்டத்தின்போது சூதாட்டக்காரர் ஒருவர் ஷகிப்பை அணிகியுள்ளார்.
18 மாதத் தடையை எதிர்கொள்கிறாரா ஷகிப் அல் ஹசன்?: வங்கதேச கிரிக்கெட்டில் பரபரப்பு

அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஐசிசியின் 18 மாதத் தடையை எதிர்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் காரணத்துக்காகவே வங்கதேச அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ஷகிப்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வங்கதேசத்தின் முன்னணி நாளிதழில் இதுகுறித்து வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐசிசியின் கட்டளையின்படியே பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ஷகிப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பகலிரவு டெஸ்ட் குறித்த கூட்டத்திலும் அவருக்கு அழைப்பு இல்லை. இரு வருடங்களுக்கு முன்பு, சர்வதேச ஆட்டத்தின்போது சூதாட்டக்காரர் ஒருவர் ஷகிப்பை அணிகியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் ஷகிப் தகவல் தெரிவிக்கவில்லை. சூதாட்டக்காரர் தன்னை அணுகியது குறித்து சமீபத்தில் ஐசிசியிடம் ஒப்புக்கொண்டார் ஷகிப். இதனால் சூதாட்டம் தொடர்பான தகவலைத் தெரிவிக்காத காரணத்துக்காக ஷகிப் அல் ஹசன் 18 மாதத் தடையை ஐசிசியிடமிருந்து எதிர்கொள்ளவுள்ளார் என்று அந்த நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியச் சுற்றுப்பயணத்தில் ஷகிப் அல் ஹசன் இடம்பெறாமல் போகலாம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் சமீபத்தில் கூறினார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: வீரர்கள் சிலர் இந்தியாவுக்குச் செல்ல மாட்டார்கள். இன்று ஷகிப்பிடம் பேசினேன். பார்க்கலாம், அவர் என்ன சொல்கிறார் என்று. மற்றவர்களும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் இந்தியாவுக்குச் செல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கடந்த சில நாள்களில் நிறைய மாறிவிட்டன. அக்டோபர் 30 அன்று வந்து, நாங்கள் இந்தியாவுக்குச் செல்லமாட்டோம் என்றால் நாங்கள் என்ன செய்வோம்? மொத்த அணியையும் மாற்றவேண்டும். கேப்டன் எங்கிருந்து கிடைப்பார்? அவர்களை வைத்து நான் என்ன செய்யட்டும் என்று சொல்லுங்கள் என்று கூறினார். இந்நிலையில் ஷகிப் அல் ஹசன் குறித்த இப்புதிய செய்தி வெளியாகியுள்ளது.

ஒருவேளை தடையை எதிர்கொண்டால் ஷகிப் அல் ஹசனுக்குப் பதிலாக முஷ்ஃபிகுர் ரஹிம் வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார். மஹ்மதுல்லா ரியாத் டி20 கேப்டனாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகிப்பின் 18 மாதத் தடை குறித்த செய்திகளுக்கு ஐசிசி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com