மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு: ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் முடிவு!

அடிலெய்ட் ஆட்டத்துக்கு முன்பு அவரிடம் இது பற்றி விசாரித்தேன். அப்போதுதான் சிறிது பேசவேண்டும் என்றார்...
மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு: ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் முடிவு!

மன அழுத்தம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் வெள்ளியன்று மெல்போர்னில் நடைபெறவுள்ளது. முதல் டி20 ஆட்டத்தில் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். 2-வது டி20 ஆட்டத்தில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகி தனது மனநலப் பிரச்னையை அவர் சரிசெய்யவுள்ளார். இந்தத் தகவலை ஆஸி. அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். மேக்ஸ்வெல்லின் நிலவரம் குறித்து லாங்கர் கூறியதாவது:

மேக்ஸ்வெல்லால் தற்போது கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து விளையாட முடியவில்லை. அடிலெய்டில் சிறப்பாக விளையாடினார். அட்டகாசமாக ஃபீல்டிங் செய்தார். எனினும் அவர் அதை ரசித்து செய்தார் என நான் நினைக்கவில்லை. விளையாடும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டாலும் அவர் சந்தோஷமாக விளையாடவில்லை. அடுத்தச் சில நாள்களில் மெல்போர்னில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். காயங்களைக் கவனிப்பது போல அவர் எந்த நிலைமையில் உள்ளார், சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் எப்போது மீண்டும் விளையாடவுள்ளார் என அலசுவோம். விளையாடும்போது அவருடைய பிரச்னை தெரியாவிட்டாலும் முகத்திரையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும்போது அவர்கள் எப்போது சரியாக இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அடிலெய்ட் ஆட்டத்துக்கு முன்பு அவரிடம் இது பற்றி விசாரித்தேன். அப்போதுதான் சிறிது பேசவேண்டும் என்றார் என மேக்ஸ்வெல்லின் நிலை குறித்து லாங்கர் தெரிவித்துள்ளார். 

கிளென் மேக்ஸ்வெல், தனது பிரச்னையிலிருந்து மீண்டு வர முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக டார்சி ஷார்ட் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com