யுஎஸ் ஓபன் : ஃபெடரருக்கு அதிர்ச்சி அளித்தார் டிமிட்ரோவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் : ஃபெடரருக்கு அதிர்ச்சி அளித்தார் டிமிட்ரோவ்


அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டார். அவரை, உலகின் 78-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் வீழ்த்தினார். 
நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டிமிட்ரோவ் 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட்களில் ஃபெடரரை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 12 நிமிடங்களுக்கு நீடித்தது. இத்துடன் ஃபெடரரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள டிமிட்ரோவ், முதல் முறையாக அவரை வெற்றி கண்டுள்ளார். 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள டிமிட்ரோவ், 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் குறைந்த உலகத் தரவரிசையுடன் அரையிறுதிக்கு முன்னேறியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 
5 முறை அமெரிக்க ஓபன் சாம்பியனான ஃபெடரர் தனது தோல்வி குறித்து கூறுகையில், இந்த ஆட்டம் டிமிட்ரோவுக்கானதாக இருந்தது. என்னால் முடிந்த வரை போராடினேன். எனினும், ஆட்டத்தின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் என்றார். 


வெற்றிக்குப் பிறகு டிமிட்ரோவ் கூறுகையில், மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆட்டத்தின்போது உடற்தகுதி ரீதியாக சிறப்பாக உணர்ந்தேன். ஃபெடரர் எதிர்கொள்ள கடினமான சில ஷாட்களை கையாண்டேன். இந்த 5 செட் ஆட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் என்றார். 
அரையிறுதிக்கு முன்னேறியுள்ள டிமிட்ரோவ், அதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவை எதிர்கொள்கிறார். முன்னதாக மெத்வதேவ் தனது காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை 7-6 (8/6), 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும். அதேபோல், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் (23) என்ற பெருமையை மெத்வதேவ் பெற்றுள்ளார்.

செரீனாவுக்கு 100-ஆவது வெற்றி 
அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அந்த நாட்டைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். 


தனது காலிறுதியில் சீனாவின் வாங் கியாங்கை 6-1, 6-0 என்ற செட்களில் மிக எளிதாக அவர் வீழ்த்தினார். இதன்மூலம், அமெரிக்க ஓபன் போட்டியில் செரீனா தனது 100-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டம், நடப்பு சீசனில் மிகக்குறைந்த நேரமே நடைபெற்ற ஆட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது. 
செரீனா தனது அரையிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொள்கிறார். போட்டித் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருக்கும் ஸ்விடோலினா தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை 6-4, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com