ரஷித் கான் அசத்தல்: அந்நிய நாட்டில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது ஆப்கானிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
ரஷித் கான் அசத்தல்: அந்நிய நாட்டில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது ஆப்கானிஸ்தான்


வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் சாட்டோகிராமில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் ரஷித் கான் சுழலில் 205 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து, 137 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், வங்கதேச அணியின் வெற்றிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை கேப்டன் ஷாகிப் மற்றும் சர்கார் இன்று தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஷாகிப் அல் ஹசன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டெயிலண்டர்களும் விக்கெட்டை பாதுகாத்து தாக்குபிடிக்கவில்லை. இதனால், அந்த அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஷித் கான் 6 விக்கெட்டுகளையும், ஜாகிர் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. இதுவரை ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ள 3 ஆட்டங்களில் இது 2-வது வெற்றியாகும். அதேசமயம், அந்த அணி அந்நிய நாட்டில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். 

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளையும், முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் அரைசதமும் அடித்த ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com