கட்டுரையாக வெளியான துயரச் சம்பவம்: கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு!

தனது குடும்பத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவங்களை முதல் பக்கக் கட்டுரையாக வெளியிட்ட சன் பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்...
கட்டுரையாக வெளியான துயரச் சம்பவம்: கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு!

31 வருடங்களுக்கு முன்பு  நடைபெற்ற தனது குடும்பத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவங்களை முதல் பக்கக் கட்டுரையாக வெளியிட்ட சன் பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். 

இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல நாட்டு வீரர்கள் ஒன்றிணைந்துதான் தற்போது இங்கிலாந்து அணிக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்கள். நியூஸிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ், 12 வயதாகும்போது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். தற்போது, இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்ற போட்டியில், இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதை அவர் பெற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடினார் ஸ்டோக்ஸ்.  

இந்நிலையில், 31 வருடங்களுக்கு முன்பு, பென் ஸ்டோக்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை சன் பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அந்தக் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டோக்ஸ் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

31 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற என் குடும்பம் தொடர்பான வலியும் உணர்ச்சிகளும் மிகுந்த தனிப்பட்டத் தகவல்களைக் கொண்ட சம்பவங்கள் கட்டுரைக்கு உகந்தது என சன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கீழ்த்தரமான, வெறுக்கத்தக்க செயலை, இதழியல் என்கிற பெயரில் வெளியிட்டுள்ளதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கடந்த 30 வருடங்களாக, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஏற்படும் மனவேதனைகளை எதிர்கொள்ள என்னுடைய குடும்பம் போராடிக்கொண்டிருக்கிறது. திடீரென, நியூஸிலாந்தில் உள்ள என்னுடைய பெற்றோரின் இல்லத்துக்கு இதுபோன்ற வேதனையைத் தரும் கட்டுரைக்காக சன் பத்திரிக்கை நிருபரை அனுப்பியுள்ளது. இது போதாதென்று, எங்களுடைய தனிப்பட்ட துன்பத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டு பரப்பரப்பு உண்டாக்குவதை சரியென எண்ணுகிறது சன் பத்திரிகை. 

என் பெயரைப் பயன்படுத்தி என்னுடைய பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை நொறுக்குவது அருவருப்பாக உள்ளது. என்னுடைய பொது வாழ்க்கையால், அதற்குரிய விளைவுகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதற்காக என் பெற்றோர், என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களின் உரிமையில் தலையிடுவதை என்னால் அனுமதிக்கமுடியாது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ உரிமையுள்ளவர்கள். இந்தத் தகவல்களை வெளியிடவேண்டும் என்கிற முடிவால் கடுமையான, வாழ்நாள் பின்விளைவுகளை முக்கியமாக என் தாயார் எதிர்கொள்கிறார். 

இது, இதழியலின் கீழ்த்தரமான செயல். விற்பனையை மட்டுமே குறிவைத்து இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அக்கறை காட்டாத ஒன்று. மேலும் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தவறான தகவல்களும் பாதிப்பை அதிகமாக்கியுள்ளன. நம் பத்திரிகைகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கவனிக்கவேண்டிய நேரம் இது. இந்தக் கட்டுரை பொதுவெளியில் இருந்தாலும், எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். 

சன் பத்திரிகை இந்தக் கட்டுரை குறித்து அளித்த விளக்கத்தில் கூறியதாவது: ஸ்டோக்ஸ் குடும்ப உறுப்பினர் ஒருவருடைய ஒத்துழைப்பின் பேரில் தான் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அவர் புகைப்படங்களை அளித்ததோடு அவரைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அனுமதித்தார். இந்தச் சோக சம்பவம், முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது நியூஸிலாந்தில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. ஸ்டோக்ஸின் திறமை மீது சன் பத்திரிகைக்கு மதிப்பு உண்டு. இந்தக் கட்டுரை தொடர்பாக அவரையும் தொடர்பு கொண்டோம். அவரோ அவருடைய நிர்வாகிகளோ இந்தக் கட்டுரையை வெளியிடக்கூடாது எனக் கூறவில்லை என்று கூறியுள்ளது. 

ஸ்டோக்ஸ் குடும்பம் குறித்த சன் பத்திரிகையின் கட்டுரைக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்ததோடு இந்தச் சமயத்தில் ஸ்டோக்ஸுக்கு ஆதரவளிப்போம் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கூறியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com