தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய 'கிங்' கோலி: 2-வது டி20யில் இந்தியா அசத்தல் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புகைப்படம்: பிசிசிஐ டிவிட்டர்
புகைப்படம்: பிசிசிஐ டிவிட்டர்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, 150 ரன்கள் என்ற இலக்குடன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார். ரோஹித் சர்மா அதிரடியாக இரண்டு சிக்ஸர் அடித்த நிலையில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷிகர் தவானுடன் கேப்டன் கோலி இணைந்தார். இந்த இணை துரிதமாக ரன் சேர்த்து விளையாடியது. இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு வந்தது. இந்த நிலையில், ஷிகர் தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இருந்தபோதிலும், விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை இழக்காமல் 40 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து நம்பிக்கையளித்து வந்தார். கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், இளம் சுழற்பந்துவீச்சாளர் ஃபோர்துயின் 19-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் கோலி ஒரு இமாலய சிக்ஸரும், கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பவுண்டரியும் அடிக்க இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ஃபெலுவாயோ, ஷம்ஸி மற்றும் ஃபோர்துயின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூருவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com