சிபிஎல் போட்டியில் விளையாடிய முதல் இந்திய வீரர்: 48 வயதில் பிரவீன் டாம்பே சாதனை

ஒரு ஓவர் மட்டும் வீசி, 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 
சிபிஎல் போட்டியில் விளையாடிய முதல் இந்திய வீரர்: 48 வயதில் பிரவீன் டாம்பே சாதனை

சமீபத்தில் தொடங்கிய 2020 சிபிஎல் போட்டி, டிரினிடாட் & டொபாகோ-வில் உள்ள இரு மைதானங்களில் 33 ஆட்டங்களாக நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று செப்டம்பர் 10-ல் நடைபெறுகிறது.  மொத்தம் 23 நாள்களுக்குத் திகட்ட திகட்ட அதிரடி ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. சிபிஎல் ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் ஃபேன்கோட் செயலியிலும் பார்க்கலாம்.

இந்நிலையில் சிபிஎல் போட்டியில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை 48 வயது பிரவீன் டாம்பே பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டிரின்பேகோ அணியில் இடம்பெற்ற பிரவீன் டாம்பே, ஒரு ஓவர் மட்டும் வீசி, 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வயதான வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான 48 வயது பிரவீன் டாம்பே. இவருடைய அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஆனால் இவருடைய தேர்வை ரத்து செய்தது பிசிசிஐ. ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய வீரர், வேறு எந்த உள்ளூர் லீக் போட்டியிலும் கலந்துகொள்ளக் கூடாது. ஆனால் டாம்பே 2019 அபுதாபி டி10 போட்டியில் விளையாடியுள்ளார். ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடியது பிசிசிஐ விதிகளுக்கு முரணானது. எனவே அவரால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது என்று கூறியது. 

இதையடுத்து பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் இணை உரிமையாளராக உள்ள டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி, பிரவீன் டாம்பேவை 5.62 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. 

டாம்பே, 2013-ல் 41 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். 33 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016-ல் குஜராத் அணிக்காக விளையாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com