ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா


கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-இல் தோல்வியடைந்து தொடரை இழந்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் ஹார்திக் பாண்டியாவும், பெளலிங்கிஸ் ஜஸ்பிரீத் பும்ராவும் முக்கியமான தருணங்களில் சிறப்பாக பங்களிப்பு செய்தனர். 

பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டதற்கான பலனை மிகச் சரியாகவே ஷர்துல் தாக்குரும், நடராஜனும் வழங்கினர். 

கான்பெராவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு சுருண்டது. இந்திய வீரர் பாண்டியா ஆட்டநாயகன் ஆனார். 

மாற்றங்கள் என்ன? இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மயங்க் அகர்வால், நவ்தீப் சைனி, முகமது ஷமி, யுவேந்திர சாஹல் ஆகியோருக்குப் பதிலாக டி. நடராஜன், ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்குப் பதிலாக கேமரூன் கிரீன், சீன் அப்பாட், ஆஷ்டன் அகர் இணைந்திருந்தனர். 

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. தவன் - கில் கூட்டணி பேட்டிங்கை தொடங்க, முதல் விக்கெட்டாக தவன் 5-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சேர்த்திருந்தார். 

அடுத்து கேப்டன் கோலி களம் காண, 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில் 16-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் கோலி அரைசதம் கடக்க, மறுமுனையில் கில்லை அடுத்து வந்த ஐயர் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சேர்த்து 23-ஆவது ஓவரில் வெளியேறினார். 

பின்னர் வந்த ராகுல் 5 ரன்களுக்கு 26-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து பாண்டியா களம் காண, மறுமுனையில் 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்த கோலி 32-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 

பாண்டியா - ஜடேஜா அபாரம்: 150 ரன்களுக்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற, பாண்டியாவுடன் இணைந்தார் ஜடேஜா. அதிரடி காட்டிய இருவரும் ஸ்கோரை மளமளவென உயர்த்தி 158 ரன்கள் சேர்க்க, இந்தியாவின் ஸ்கோர் 300-ஐ கடந்தது. 

ஓவர்கள் முடிவில் பாண்டியா 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 92, ஜடேஜா 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அகர் 2, ஹேஸில்வுட், அப்பாட், ஸம்பா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

ஆஸி. இன்னிங்ஸ்: பின்னர் 303 ரன்களை இலக்காகக் கொண்டு பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர் லாபுசான் 1 பவுண்டரி உள்பட 7 ரன்களுக்கு 6-ஆவது ஓவரில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஸ்மித் 7 ரன்களுக்கு 12-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். 

மறுமுனையில் ஃபிஞ்ச் நிதானமாக ஆடி ரன்கள் சேர்க்க, ஸ்மித்தை அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 22 ரன்களுக்கு 23-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கிரீன் களம் காண, மறுபுறம் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் சேர்த்த ஃபிஞ்ச் 26-ஆவது ஓவரில் நடையைக் கட்டினார். 

மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: அடுத்து கேரி ஆட வர, மறுமுனையில் கிரீன் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 21 ரன்கள் சேர்த்து 31-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது பேட்ஸ்மேனாக வந்த மேக்ஸ்வெல், விக்கெட் சரிவைத் தடுத்து ரன்களை அதிரடியாக உயர்த்தத் தொடங்கினார். இதனால் இந்திய பெளலர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. 

கேரி 4 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் அடித்து 38-ஆவது ஓவரில் அவுட்டானார். அடுத்து அகர் ஆட வர, மறுபுறம் இந்திய பெளலர்களை அச்சுறுத்தி வந்த மேக்ஸ்வெல் விக்கெட்டை 45-ஆவது ஓவரில் பும்ரா சாய்த்தார். மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 59 ரன்கள் அடித்திருந்தார். 

இதையடுத்து ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அகர் 2 பவுண்டரிகள் உள்பட 28, அப்பாட் 4, ஸம்பா 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஹேஸில்வுட் மட்டும் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர் 3, பும்ரா, நடராஜன் தலா 2, யாதவ், ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

ஸ்டார்க் காயம்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதுகுப் பகுதியில் காயம் கண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. 
முதல் இரு ஆட்டங்களிலும் அவர் சோபிக்காததை அடுத்து, அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவதில் சந்தேகம் இருந்தது. எனினும், அவர் பிளேயிங் லெவனில் இருப்பார் என்று ஃபிஞ்ச் கூறியிருந்தார். இந்நிலையில், ஸ்டார்க் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக புதன்கிழமை டாஸ் வீசும்போது ஃபிஞ்ச் கூறினார். ஏற்கெனவே அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இடுப்புப் பகுதியில் காயம் கண்டு சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தனது 242-ஆவது இன்னிங்ஸில் கோலி இந்த ரன்களை எட்டியுள்ளார். 

முன்னதாக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸ்களில் அந்த ரன்களை எட்டியதே விரைவானதாக இருந்தது. 

கடந்த 2008-இல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தடம் பதித்த கோலி, 43 சதங்களையும், 59 அரைசதங்களையும் அடித்துள்ளார். அவரது சராசரி 60 ஆகும்.

தடம் பதித்த தமிழன்

இந்த ஆட்டத்தின் மூலம் தமிழக வீரர் டி. நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். பெளலிங்கில் சொதப்பியதால் 2-ஆவது ஆட்டத்தில் தோற்றதாக கேப்டன் கோலி குறிப்பிட்டிருந்தார். எனவே 3-ஆவது ஆட்டத்தில் பெளலிங் வரிசையில் நிச்சயம் மாற்றம் வரும் என்ற நிலையில், பந்துவீச்சில் ஒவ்வொரு பந்துக்கும் மாற்றம் காட்டும் நடராஜன் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. 

அதேபோல், ஷர்துல் தாக்குருடன் அவரும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டும், முக்கியமானவீரருமான மார்னஸ் லாபுசானை 6-ஆவது ஓவரில் நடராஜன் சாய்த்தார். அதேபோல், நெருக்கடி மிகுந்த 46 மற்றும் 48-ஆவது ஓவர்களில் பந்துவீசி அவற்றில் 8 ரன்களே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார் நடராஜன். 

ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பால், அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரிலும் நடராஜன் நிச்சயம் பிளேயிங் லெவனில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. 

மகிழ்ச்சியில் குடும்பத்தினர்: நடராஜனின் முதல் சர்வதேச ஆட்டத்தை, அவரது குடும்பத்தினர் தங்களின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் வீட்டில் தொலைக்காட்சியில் கண்டு களித்தனர். 

இதுகுறித்து அவரது தாய் சாந்தா கூறுகையில், "சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது நடராஜனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. நாங்கள் வறுமையோடு இருந்தாலும், நடராஜனின் விளையாட்டு ஆர்வத்துக்கு தடை விதிக்கவில்லை. இதனால், தற்போது மிகப்பெரிய உயரத்தை நடராஜன் எட்டியுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார். 

நடராஜனின் உறவினர்கள் கூறுகையில், "நடராஜன் தனது சிறப்பான விளையாட்டின் மூலம் சொந்த ஊருக்கு பெருமை தேடித் தந்துள்ளார்' என்றார்.

புள்ளிகள் பட்டியல்: முதலிடத்தில் ஆஸி.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியா, ஐசிசியின் உலகக் கோப்பை சூப்பர் ஒருநாள் கிரிக்கெட் லீக் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி புதன்கிழமை முதலிடத்துக்கு வந்தது. 

ஆஸ்திரேலியா 40 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்க, கடைசி ஆட்டத்தில் வென்ற இந்தியா 9 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 30 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 20 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வே, அயர்லாந்து தலா 10 புள்ளிகளுடன் முறையே 4 மற்றும் 5-ஆம் இடங்களில் உள்ளன.

புள்ளிகள் பட்டியல்: முதலிடத்தில் ஆஸி.


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியா, ஐசிசியின் உலகக் கோப்பை சூப்பர் ஒருநாள் கிரிக்கெட் லீக் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி புதன்கிழமை முதலிடத்துக்கு வந்தது. 

ஆஸ்திரேலியா 40 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்க, கடைசி ஆட்டத்தில் வென்ற இந்தியா 9 புள்ளிகளுடன் 6}ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 30 புள்ளிகளுடன் 2}ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 20 புள்ளிகளுடன் 3}ஆம் இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வே, அயர்லாந்து தலா 10 புள்ளிகளுடன் முறையே 4 மற்றும் 5}ஆம் இடங்களில் உள்ளன.

ஸ்கோர் போர்டு

இந்தியா இன்னிங்ஸ்

ஷிகர் தவன் (சி) அகர் (பி) அப்பாட்    16 (27) 
ஷுப்மன் கில் (எல்பிடபிள்யூ) (பி) அகர்    33 (39) 
விராட் கோலி (சி) கேரி (பி) ஹேஸில்வுட்    63 (78) 
ஷ்ரேயஸ் ஐயர் (சி) லாபுசான் (பி) ஸம்பா    19 (21) 
லோகேஷ் ராகுல் (எல்பிடபிள்யூ) (பி) ஸம்பா    5 (11) 
ஹார்திக் பாண்டியா (நாட் அவுட்)    92 (76) 
ரவீந்திர ஜடேஜா (நாட் அவுட்)    66 (50)  
உதிரிகள்    8
மொத்தம் (50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு)     302

விக்கெட் வீழ்ச்சி: 1-26 (தவன்), 2-82 (கில்), 3-114 (ஐயர்), 4-123 (ராகுல்), 5-152 (கோலி)
பந்துவீச்சு:  ஹேஸில்வுட் 10-1-66-1; மேக்ஸ்வெல் 5-0-27-0; அப்பாட் 10-0-84-1; கிரீன் 4-0-27-0; அகர் 10-0-44-2; 
ஸம்பா 10-0-45-1; ஹென்ரிக்ஸ் 1-0-7-0.

ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 

மார்னஸ் லாபுசான் (பி) நடராஜன்    7 (13) 
ஆரோன் ஃபிஞ்ச் (சி) தவன் (பி) ஜடேஜா    75 (82) 
ஸ்டீவ் ஸ்மித் (சி) ராகுல் (பி) தாக்குர்    7 (15) 
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் (சி) தவன் (பி) தாக்குர்    22 (31) 
கேமரூன் கிரீன் (சி) ஜடேஜா (பி) யாதவ்    21 (27) 
அலெக்ஸ் கேரி (ரன் அவுட்) கோலி/ராகுல்    38 (42) 
கிளென் மேக்ஸ்வெல் (பி) பும்ரா    59 (38) 
ஆஷ்டன் அகர் (சி) யாதவ் (பி) நடராஜன்    28 (28) 
சீன் அப்பாட் (சி) ராகுல் (பி) தாக்குர்    4 (9) 
ஆடம் ஸம்பா (எல்பிடபிள்யூ) (பி) பும்ரா    4 (7) 
ஜோஷ் ஹேஸில்வுட் (நாட் அவுட்)    7 (7)  
உதிரிகள்    17
மொத்தம் (49.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு)    289

விக்கெட் வீழ்ச்சி: 1-25 (லாபுசான்), 2-56 (ஸ்மித்), 
3-117 (ஹென்ரிக்ஸ்), 4-123 (ஃபிஞ்ச்), 5-158 (கிரீன்), 
6-210 (கேரி), 7-268 (மேக்ஸ்வெல்), 8-278 (அப்பாட்), 
9-278 (அகர்), 10-289 (ஸம்பா).
பந்துவீச்சு: பும்ரா 9.3-0-43-2; நடராஜன் 10-1-70-2; 
தாக்குர் 10 -1-51-3; யாதவ் 10-0-57-1; ஜடேஜா 10-0-62-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com