டி20 உலகக் கோப்பையில் தமிழக வீரர் நடராஜன்: விவிஎஸ் லக்‌ஷ்மண் விருப்பம்

டி20 உலகக் கோப்பையில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்...
டி20 உலகக் கோப்பையில் தமிழக வீரர் நடராஜன்: விவிஎஸ் லக்‌ஷ்மண் விருப்பம்

டி20 உலகக் கோப்பையில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியுள்ளார். 

2017-ல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகச் சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி அனைவர் கவனத்தையும் கவர்ந்தார் நடராஜன்.

ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

யார்க்கர் பந்தை வீசுவது மிகவும் கடினம் என அனைவரும் எண்ணுகிற நிலையில் அதில் நிபுணத்துவம் பெற்றுள்ள நடராஜனின் பந்துவீச்சு, கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார். 

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விலகினார். இதனால் தமிழக வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கும் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தேர்வாக வேண்டும் என்று முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியுள்ளார். இதுபற்றி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:

அடுத்த வருடம் உலகக் கோப்பை நடைபெறுகிறது. இறுதி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடிய ஒருவர் இந்திய அணிக்குத் தேவை. கடைசி ஓவர்களில் ஷமியும் சைனியும் நன்றாக வீசுவதைப் பார்ப்பது நன்றாக உள்ளது. இடது கை பந்துவீச்சாளராக இருப்பதால் எதிரணிக்கு நடராஜனால் ஆச்சர்யம் அளிக்க முடியும். 

ஐபிஎல் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்ட பிறகு கலீல் அஹமத்துக்கு வாய்ப்பளிப்பதை விடவும் நடராஜனுக்கே முன்னுரிமை அளித்தோம். பயிற்சியின்போது அற்புதமாகப் பந்துவீசி நம்பிக்கை ஏற்படுத்தினார். யார்க்கர் பந்தை விடவும் வேறு விதமாகவும் அவரால் சிறப்பாகப் பந்துவீச முடியும். ஆனால் அதை ஐபிஎல் போட்டியில் அவர் பயன்படுத்தவில்லை. கூர்மையான பவுன்சர், ஸ்லோ பால், ஆஃப் கட்டர் என பலவகைப் பந்துகளை அவரால் வீச முடியும். மிகவும் கடினம் என எண்ணக்கூடிய யார்க்கர் பந்துகளை மிகுந்த நம்பிக்கையுடன் வீசுவார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com