புத்திசாலித்தனமாக காப்பீடு செலுத்தி பெரிய நஷ்டத்தைத் தவிர்த்துள்ள விம்பிள்டன் போட்டி: முழு விவரங்கள்

வருடாவருடம் ஒழுங்காகக் காப்பீடு செலுத்தியதால் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துள்ளது அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப்.
புத்திசாலித்தனமாக காப்பீடு செலுத்தி பெரிய நஷ்டத்தைத் தவிர்த்துள்ள விம்பிள்டன் போட்டி: முழு விவரங்கள்

கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போா் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக விம்பிள்டன் போட்டியின் தலைவா்கள் மற்றும் போட்டி நிா்வாக அமைப்புகளின் பிரநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டதாக அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தலைவா் இயான் ஹெவிட் கடந்த வாரம் அறிவித்தாா். இதனால் உலகப் போர்களுக்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக முதல்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்படுகிறது. முதலாம் உலகப் போரினால் 1915-18 வரை விம்பிள்டன் நடைபெறவில்லை. இரண்டாம் உலகப் போரினால் 1940-45 வரை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

விம்பிள்டனின் ஆண்டு வருமானம் ஏறக்குறைய 250 மில்லியன் பவுண்ட்கள். அதாவது ரூ. 2,365 கோடி. இந்த வருடம் போட்டி நடக்காததால் இதன் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீடு எடுத்து வைத்திருந்ததால் பெரிய இழப்பிலிருந்து மீளவுள்ளது விம்பிள்டன் போட்டியை நடத்தும் அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப்.

2003 முதல் விம்பிள்டன் போட்டிக்காக காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி வருகிறது அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப். இதனால் தொற்றுநோய் உள்பட எவ்விதக் காரணங்களுக்காகவும் விம்பிள்டன் போட்டியை நடத்த முடியாமல் போனால் நஷ்டத்தைச் சரிகட்ட முடியும். இதற்காக வருடாவருடம் கிட்டத்தட்ட ரூ. 14 கோடி பிரீமியம் தொகை செலுத்தப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட இதர போட்டிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்தாத நிலையில் விம்பிள்டன் போட்டியை நடத்தும் அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப் சில ஆண்டுகளுக்கு முன்பு புத்திசாலித்தனமாக எடுத்த முடிவு பெருமளவு நஷ்டத்தைச் சரிகட்ட உதவியுள்ளது.

விம்பிள்டன் போட்டிக்கான காப்பீட்டுக்காகக் கடந்த 17 ஆண்டுகளாக ரூ. 241 கோடி பிரீமியம் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக, இந்த வருடம் விம்பிள்டன் போட்டி நடக்காததால் ரூ. 1,078 கோடி காப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கவுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் உலகப் போர்கள் எதுவும் நடக்காது, வருடா வருடம் தவறாமல் போட்டி நடக்கிறது போன்ற காரணங்களுக்காக காப்பீடு செலுத்தாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

வரும் மே மாதம் நடைபெறவிருந்த மற்றொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன், காப்பீடு எடுக்காததால் செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியை நடத்திவிடவேண்டும் என்கிற நிலைமையே உள்ளது. ஆனால் விம்பிள்டனுக்கு அந்த நெருக்கடி இல்லை. மாற்று ஏற்பாடுகளை யோசிக்கத் தேவையில்லை. வருடாவருடம் ஒழுங்காகக் காப்பீடு செலுத்தியதால் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துள்ளது அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப்.

விம்பிள்டனின் ஆண்டு வருமானம் - ரூ. 2,365 கோடி
காப்பீட்டுக்காகக் கடந்த 17 ஆண்டுகளாகச் செலுத்திய ப்ரீமியம் தொகை - ரூ. 241 கோடி
இந்த ஆண்டு காப்பீடு மூலமாகக் கிடைக்கவுள்ள தொகை - ரூ. 1,078 கோடி

காப்பீடு என்பது முதலீடு அல்ல. செலவு. ஆனால் இக்கட்டான சமயத்தில் அது நிச்சயம் கைகொடுக்கும் என்பது விம்பிள்டன் போட்டிக்கான காப்பீடு மூலமாகக் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com