2020 ஐபிஎல்-லில் விளையாடவில்லை: முடிவில் உறுதியாக இருக்கும் ஸ்டார்க்

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த முடிவை நான் ஏற்கெனவே எடுத்துவிட்டேன்...
2020 ஐபிஎல்-லில் விளையாடவில்லை: முடிவில் உறுதியாக இருக்கும் ஸ்டார்க்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில்லை என்கிற முடிவில் மாற்றமில்லை என ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார்.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் ஸ்டார்க். இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்ததிலிருந்து மாறப் போவதில்லை என ஸ்டார்க் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது அருமையான அனுபவம் என்பது எனக்குத் தெரியும். இப்போது ஐபிஎல் போட்டி வேறு தேதியில் நடைபெற்றாலும் என்னுடைய முடிவில் மாற்றமில்லை. எல்லோரும் ஐபிஎல்-லில் விளையாடும்போது நான் ஓய்வெடுத்து அடுத்து வரும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராவேன். அடுத்த வருடமும் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதில் விளையாட வேண்டும் என எனக்குத் தோன்றினாலோ அல்லது நான் பங்கேற்க வேண்டும் என மற்றவர்கள் விரும்பினாலோ என்னுடைய முடிவை மாற்றிக் கொள்வேன். இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த முடிவை நான் ஏற்கெனவே எடுத்துவிட்டேன் என்றார்.

2015 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடினார் ஸ்டார்க். காயம் காரணமாக அடுத்த வருடம் விளையாடவில்லை. 2018-ல் ரூ. 9.60 கோடிக்கு ஏலத்தில் ஸ்டார்க்கைத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி. ஆனால் காயம் காரணமாக மீண்டும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என ஏலத்துக்கு முன்பே அறிவித்துவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com