வெற்றி தலைக்கேறி விட்டது: ரெய்னா விலகல் குறித்து என். சீனிவாசன் பேட்டி

உங்களுக்குத் தயக்கமோ அதிருப்தியோ இருந்தால் நீங்கள் விலகிச் செல்லலாம்...
வெற்றி தலைக்கேறி விட்டது: ரெய்னா விலகல் குறித்து என். சீனிவாசன் பேட்டி

ஐபிஎல் 2020 போட்டியிலிருந்து சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா விலகியதற்கு அந்த அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்தச் சமயத்தில் ரெய்னாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். 

இரு சிஎஸ்கே வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாகவே ரெய்னா விலகியுள்ளதாகப் பலராலும் கருதப்பட்டு வந்த நிலையில், தன் குடும்பத்தில் நேர்ந்த எதிர்பாராத துயரச் சம்பவம் காரணமாகவே சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதான்கோட்டில் உள்ள தரியல் கிராமத்தில் வசித்த வந்த ரெய்னாவின் அத்தை, மாமா ஆகியோர் ஆகஸ்ட் 19 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த இக்குடும்பத்தினரை ஆயுதங்களைக் கொண்டு நள்ளிரவில் சிலர் தாக்கியுள்ளார்கள். இதில் ரெய்னாவின் 58 வயது மாமா அசோக் குமார் மரணமடைந்துள்ளார். ரெய்னா தந்தை சகோதரியான ஆஷா தேவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவுட்லுக் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரெய்னாவின் விலகல் குறித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் பதில் அளித்ததாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது ஒரு குடும்பம் போல. அதனுடன் இணைந்து வாழ மூத்த வீரர்கள் பழகிவிட்டார்கள். 

உங்களுக்குத் தயக்கமோ அதிருப்தியோ இருந்தால் நீங்கள் விலகிச் செல்லலாம். யாரையும் எதையும் செய்யச் சொல்லி நான் கட்டாயப்படுத்த மாட்டேன். சிலநேரங்கள் வெற்றி தலைக்கேறிவிடும். 

ருதுராஜ் அருமையான பேட்ஸ்மேன். இந்தமுறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். போட்டியின் நட்சத்திரமாகவும் அவர் மாறலாம், யாருக்குத் தெரியும்!

ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்கவில்லை. தான் இழந்ததை நிச்சயம் ரெய்னா உணர்வார். அதேபோல எல்லாப் பணத்தையும் (ரூ. 11 கோடி சம்பளம்) அவர் இழக்கப் போகிறார். 

நான் தோனியிடம் பேசினேன். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும் பிரச்னையில்லை என்று எனக்கு உறுதியளித்தார். ஜூம் அழைப்பு மூலமாக அனைத்து வீரர்களிடமும் தோனி பேசியுள்ளார். பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். யாரால் தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை. உறுதியான மனநிலை கொண்ட கேப்டன் என்னிடம் உள்ளார். எதனாலும் அவர் உடைந்து போவதில்லை. இது அணி வீரர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது என்றார்.

துபையில் ரெய்னாவுக்கு அளிக்கபட்ட விடுதி அறை குறித்து அவருக்கு அதிருப்தி நிலவியதாகவும் அவுட்லுக் ஊடகம் செய்தி வெளியிட்டது. தோனிக்கு வழங்கப்பட்ட அறை போல தனக்கும் ஓர் அறையை ஒதுக்குமாறு ரெய்னா கேட்டதாகவும் மேலும் பாதுகாப்பு வளையத்தின் விதிமுறைகளை அவரால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. என். சீனிவாசனின் பேட்டிக்குப் பிறகு ரெய்னாவின் தரப்பிலிருந்து விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com