இன்று தொடங்குகிறது பகலிரவு டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. பகலிரவு ஆட்டமான இது, பிங்க் நிற பந்து கொண்டு விளையாடப்படுகிறது. 
இன்று தொடங்குகிறது பகலிரவு டெஸ்ட்


அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. பகலிரவு ஆட்டமான இது, பிங்க் நிற பந்து கொண்டு விளையாடப்படுகிறது. 

சமபலம்: மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடப்படும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சம பலத்துடன் உள்ளன. பேட்டிங் என்று வரும்போது இந்திய தரப்பில் கேப்டன் கோலியும், ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிக்கு வலு சேர்க்கின்றனர். டெஸ்ட் தொடர் என்றாலே இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா தவிர்க்க முடியாத வீரராக இருக்க, அவருக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய அணியில் தயாராக இருக்கிறார் மார்னஸ் லபுசான். 

பெüலிங்கில்...: அதேபோல் பந்துவீச்சு என்று வரும்போது இந்தியாவுக்காக ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் வேகம் காட்டுகின்றனர். அதற்கு சரிசமமாக ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்கத் தயாராக இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சுக்கு முறையே ரவிச்சந்திரன் அஸ்வினும், நாதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோரும் உள்ளனர். 

குறை...:  இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இல்லாதது எப்படி தாக்கத்தை ஏற்படுத்துமோ, அப்படித்தான் ஆஸ்திரேலிய தரப்பில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இல்லாததும். இருப்பினும் தங்களுக்கான இந்த பாதிப்பை சரிசெய்துகொள்ள இரு அணிகளுமே தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஆஸி.க்கு சாதகம்: எப்படிப் பார்த்தாலும் ஏற்கெனவே பல பகலிரவு டெஸ்டுகளில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த ஆட்டத்தில் சாதகமாகவே இருக்கும். இந்தியா இதற்கு முன் ஒரே முறைதான் (2019) பகலிரவு டெஸ்டில் விளையாடியுள்ளது. 

திருப்பம்: பகலிரவு டெஸ்டைப் பொருத்தவரை, முதலில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அந்தி சாயந்த நேரத்துக்குப் பிறகு விளக்கு வெளிச்சத்தில் ஆடும்போது பெüலர்களின் தாக்கம் அதிகரிக்கும். 

பிளேயிங் லெவன் தேர்வு

ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் தகுதியான வீரர்கள் பலர் இருந்ததால் டெஸ்ட் தொடருக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்வது முக்கிய விவாதமாக இருந்தது. 

இதில் தொடக்க வீரர் இடத்துக்கு ஷுப்மன் கில், பிருத்வி ஷா இடையேயும், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இடத்துக்கு ரித்திமான் சாஹா - ரிஷப் பண்ட் இடையேயும் போட்டி நிலவி வந்தது. லோகேஷ் ராகுலும் அதற்கான போட்டியில் இருந்தார். இறுதியில் தொடக்க வீரராக பிருத்வி ஷாவும், விக்கெட் கீப்பராக ரித்திமான் சாஹாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பயிற்சி ஆட்டத்தின்போது பண்ட் சதம் அடித்ததும், சாஹா அரைசதம் அடித்ததும் ஒப்பிடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சாஹா அந்த ரன்களை எடுத்ததும், வேகம் குறைந்த பந்துவீச்சாளர்களின் பெüலிங்கை பண்ட் எதிர்கொண்டதும் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில், "ஷுப்மன் கில் நம்பிக்கையான இளம் வீரர். அவர் தனது வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும். ஏற்கெனவே டெஸ்டில் விளையாடியுள்ள பிருத்வி ஷா, ஆஸ்திரேலிய களத்தில் எவ்வாறு ஆடுகிறார் என்பதை அறிய வேண்டியுள்ளது. லோகேஷ் ராகுலும் சிறந்த வீரர்தான். ஆனாலும் எந்த இரு வீரர்கள் ஆடுவது அணியை சமநிலைப்படுத்தும் என்பதைப் பொறுத்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது' என்றார்.


தடம் பதிக்கிறார் கேமரூன் கிரீன்?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் பங்கேற்கவுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு அவர் பங்கேற்றால் இது அவரது முதல் சர்வதேச டெஸ்ட் ஆட்டமாக இருக்கும். 

இந்திய - ஆஸ்திரேலிய "ஏ' அணிகள் இடையேயான முதல் பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த கிரீன், அதில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதையடுத்து பிங்க் பந்து டெஸ்டில் அவர் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியிருந்தது. 

இந்நிலையில் 2-ஆவது பயிற்சி ஆட்டத்தின்போது கிரீன் விசியை பந்தை ஜஸ்பிரீத் பும்ரா அடிக்க, அது கிரீன் தலையில் பட்டு அவருக்கு காயமானது. "கன்கஷன்' சூழல் காரணமாக அவர் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. 

இச்சூழலில் அவர் முதல் டெஸ்டில் பங்கேற்பார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புதன்கிழமை கூறினார். "கிரீன் காயத்திலிருந்து மீண்டுள்ளார். நல்ல முறையில் பயிற்சியிலும் பங்கேற்றார். எல்லாம் சரியாக தொடரும் பட்சத்தில் முதல் டெஸ்டில் அவர் விளையாடுவார்' என்றார் அவர்.


எதிர்கொள்வார்களா?

அடிலெய்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் செவ்வாய்க்கிழமை பயிற்சியின்போது பிங்க் நிற பந்து கொண்டு நடராஜன் வீசிய வேகப்பந்துகளை எதிர்கொண்டனர். சுமார் 130 கி.மீ. வேகத்தில் வரும் அவரது பெüலிங் அவர்களுக்கு சவால் அளிக்கவே செய்தது. எனவே பிங்க் பந்தில் அதிக விக்கெட்டுகள் சாய்த்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் திணறடிக்கும் பெüலிங்கை இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்வர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அர்த்தமற்றது... 

கடந்த ஆண்டுகளில் இருந்துவந்த பல விஷயங்கள் (வார்த்தைப் போர்) 
தேவையற்றது என்பதை இந்த ஆண்டு கரோனா சூழல் அனைவருக்கும் 
உணர்த்தியுள்ளது. ஆட்டத்தின்போது அணிகளுக்கு எதிராகவோ, தனிநபர்களுக்கு எதிராகவோ மனக்கசப்புடன் இருப்பது அர்த்தமில்லாதது. 

தேவைக்கேற்ப... 

எப்போதுமே ஆக்ரோஷமாக இருக்க வேண்டியதில்லை. அதேநேரத்தில் 
தேவை ஏற்படும்போது வார்த்தைப் போரில் பின்வாங்க மாட்டோம். ஆட்டத்துக்கான எங்களின் வியூகத்தை முறையாகச் 
செயல்படுத்தி திறமையை வெளிப்படுத்துவதே முதல் இலக்கு.

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரித்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ்


ஆஸ்திரேலியா

டிம் பெய்ன் (கேப்டன்), ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், 
மார்னஸ் லபுசான், நாதன் லயன், மைக்கெல் நேசர், ஜேம்ஸ் பட்டின்சன், 
ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட்


ஆட்டநேரம்: 

காலை 9.30 மணி 
(இந்திய நேரப்படி)

இடம் :

அடிலெய்டு

நேரடி ஒளிபரப்பு : 

சோனி சிக்ஸ், சோனி டென் 1, சோனி டென் 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com