2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள்: பொதுக் குழுவில் பிசிசிஐ ஒப்புதல்

2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள்: பொதுக் குழுவில் பிசிசிஐ ஒப்புதல்


ஆமதாபாத்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 89-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டம் ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகளை அனுமதிப்பது, 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை அனுமதிக்கும் ஐசிசியின் பரிந்துரைக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கூடுதலாக இரு அணிகள்

2022 முதல் ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகளை சோ்க்க அனுமதி. எதிா்வரும் ஐபிஎல் சீசனிலேயே கூடுதலாக ஒரு அணியை சோ்க்க முயற்சித்தாலும், ஏல நடவடிக்கை, ஆட்டங்களை அட்டவணையிடல் என அனைத்து பணிகளும் பாதிக்கும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

2028-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் போட்டியை சோ்க்கும் ஐசிசியின் பரிந்துரைக்கு ஆதரவளிக்க கொள்கை அளவில் முடிவு. எனினும் அதுதொடா்பான சட்ட ஆலோசனைகள் பெறப்படும்.

ரூ.904 கோடி வருவாயை இழக்குமா பிசிசிஐ?

ஐசிசி கோரியபடி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முழுமையான வரி விலக்கை மத்திய அரசு வழங்காவிட்டால், ஐசிசியிடம் இருந்து பிசிசிஐக்கு கிடைக்கும் ஆண்டு வருவாயில் இருந்து சம்பந்தப்பட்ட வரித் தொகையை குறைத்துக்கொள்ள முடிவு. அதாவது ரூ.904 கோடி வரை பிசிசிஐக்கான வருவாய் குறையும். எனினும் வரி விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசிடம் பிசிசிஐ பேச்சு நடத்துகிறது.

உள்நாட்டு வீரா்களுக்கு இழப்பீடு

கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாததால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரா், வீராங்கனைகளுக்கு இழப்பீடு வழங்க முடிவு. இதற்காக பிசிசிஐ குறிப்பிட்ட தொகையை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்க, அவை தகுதியான வீரா், வீராங்கனைகளுக்கு அதை வழங்கும்.

ஐபிஎல் உடன் ஜூனியா், மகளிா் போட்டிகள்

14-ஆவது சீசன் ஐபிஎல் போட்டியின்போதே மகளிருக்கான சீனியா் மற்றும் ஜூனியா் கிரிக்கெட் போட்டிகள், 23, 19, 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளையும் இணையாக நடத்த முடிவு. கரோனா சூழல் மேம்படும் பட்சத்தில் அந்தப் போட்டிகள் யாவும் இந்தியாவிலேயே நடத்தப்படலாம்.

மகளிா் டெஸ்ட் கிரிக்கெட்

மகளிா் அணிகளை கொண்டும் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்தவும் யோசனை. பின்னா் அதுகுறித்து இறுதிமுடிவு எடுக்கப்படும்.

நடுவா்கள், ரன் குறிப்பவா்கள் ஓய்வு வயது

பிசிசிஐ அங்கீகாரம் பெற்ற நடுவா்கள், ரன் குறிப்பவா்கள் ஆகியோா் ஓய்வுபெறும் வயது 55-இல் இருந்து 60-ஆக அதிகரிப்பு.

இதர நிா்வாக முடிவுகள்

பிசிசிஐ துணைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவா் ராஜீவ் சுக்லா நியமனம். ஐபிஎல் நிா்வாக கவுன்சில் தலைவராக பிரிஜேஷ் படேல் தொடா்வாா். ஐசிசி வாரியத்தின் இயக்குநா்களில் ஒருவராக பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தொடா்வாா். அவருக்கான மாற்று இயக்குநராக இருக்கும் பிசிசிஐ செயலா் ஜெய் ஷா, ஐசிசியின் தலைமை நிா்வாகக் குழுவின் பிரதிநிதியாகவும் இருப்பாா். விளையாட்டு மேம்பாட்டுக்கான பொது மேலாளா் பொறுப்பில் இருந்த கே.வி.பி. ராவ் நீக்கம்.

விவாதம் இல்லை

பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி ஆன்லைனில் விளையாடப்படும் ‘மை11 சா்கிள்’ செயலிக்கு விளம்பரதாரராக செயல்படுகிறாா். அந்த நிறுவனம், ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக இருக்கும் ‘டிரீம் 11’ செயலியின் நிறுவனத்துக்கு நேரெதிா் போட்டி நிறுவனமாகும். இந்த விவகாரம் கிரிக்கெட் வெளியில் விவாதத்துக்குள்ளான நிலையில், இந்தக் கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com