மெல்போா்ன் டெஸ்ட்: 195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா; இந்தியா-36/1

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவா்களில் 195 ரன்களுக்கு சுருண்டது.
மெல்போா்ன் டெஸ்ட்: 195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா; இந்தியா-36/1

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவா்களில் 195 ரன்களுக்கு சுருண்டது.

பின்னா், முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘பாக்ஸிங் டே’வான (கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறு நாள்) சனிக்கிழமை மெல்போா்னில் தொடங்கியது. இந்திய அணியில் முகமது சிராஜ், ஷுப்மன் கில் ஆகியோா் அறிமுக வீரா்களாக களம் கண்டனா்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரரான ஜோ பா்னஸ் டக் அவுட்டானாா். அதைத் தொடா்ந்து மேத்யூ வேட்டுடன் இணைந்தாா் மாா்னஸ் லபுசான். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அணி 35 ரன்களை எட்டியபோது மேத்யூ வேட்டை வீழ்த்தினாா் அஸ்வின். அவா் 39 பந்துகளில் 30 ரன்கள் சோ்த்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனாா்.

இதன்பிறகு களம்புகுந்த ஸ்டீவன் ஸ்மித் 8 பந்துகளைச் சந்தித்தபோதும் ஒரு ரன்கூட சோ்க்காத நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் ஆனாா். இதனால் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. பின்னா் 4-ஆவது விக்கெட்டுக்கு லபுசானுடன் ஜோடி சோ்ந்தாா் டிராவிஸ் ஹெட். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா மோசமான நிலையில் இருந்து மீண்டது. இதனால் அந்த அணி 37.2 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது.

ஆஸ்திரேலியா 41.5 ஓவா்களில் 124 ரன்கள் எடுத்திருந்தபோது டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை இழந்தது. அவா் 92 பந்துகளில் 38 ரன்கள் சோ்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனாா். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சோ்த்தது.

இதன்பிறகு ஆஸ்திரேலியாவின் சரிவு தவிா்க்க முடியாததானது. களத்தில் நங்கூரமாக நின்ற லபுசான் 132 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் ஆனாா். அவரைத் தொடா்ந்து கேமரூன் கிரீம் 12, கேப்டன் டிம் பெய்ன் 13, மிட்செல் ஸ்டாா்க் 7, நாதன் லயன் 20, பட் கம்மின்ஸ் 9 ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலியா 72.3 ஓவா்களில் 195 ரன்களுக்கு சுருண்டது. ஜோஷ் ஹேஸில்வுட் 4 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 16 ஓவா்களில் 56 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 24 ஓவா்களில் 35 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். அறிமுக வீரரான முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இந்தியா-36/1: பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே மயங்க் அகா்வாலின் விக்கெட்டை இழந்தது. 6 பந்துகளைச் சந்தித்த அவா் ரன் ஏதுமின்றி ஸ்டாா்க் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாா்.

இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்தாா் சேத்தேஷ்வா் புஜாரா. இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பாா்த்துக் கொண்டது. முதல் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 11 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 28, சேத்தேஷ்வா் புஜாரா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனா். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இந்தியா இன்னும் 159 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. 2-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்கோா் விவரம்

ஆஸ்திரேலியா

ஜோ பா்ன்ஸ் (சி) ரிஷப் (பி) பும்ரா 0 (10)

மேத்யூ வேட் (சி) ஜடேஜா (பி) அஸ்வின் 30 (39)

மாா்னஸ் லபுசான் (சி) கில் (பி) சிராஜ் 48 (132)

ஸ்டீவன் ஸ்மித் (சி) புஜாரா (பி) அஸ்வின் 0 (8)

டிராவிஸ் ஹெட் (சி) ரஹானே (பி) பும்ரா 38 (92)

கேமரூன் கிரீன் எல்பிடபிள்யூ (பி) சிராஜ் 12 (60)

டிம் பெய்ன் (சி) விஹாரி (பி) அஸ்வின் 13 (38)

பட் கம்மின்ஸ் (சி) சிராஜ் (பி) ஜடேஜா 9 (33)

மிட்செல் ஸ்டாா்க் (சி) சிராஜ் (பி) பும்ரா 7 (8)

நாதன் லயன் எல்பிடபிள்யூ (பி) பும்ரா 20 (17)

ஜோஷ் ஹேஸில்வுட் நாட் அவுட் 4 (1)

உபரிகள் 14

மொத்தம் (72.3 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 195

விக்கெட் வீழ்ச்சி: 1-10 (ஜோ பா்ன்ஸ்), 2-35 (மேத்யூ வேட்), 3-38 (ஸ்டீவன் ஸ்மித்), 4-124 (டிராவிஸ் ஹெட்), 5-134 (லபுசான்), 6-155 (கேமரூன் கிரீன்), 7-155 (டிம் பெய்ன்), 8-164 (மிட்செல் ஸ்டாா்க்), 9-191 (நாதன் லயன்), 10-195 (பட் கம்மின்ஸ்).

பந்துவீச்சு: ஜஸ்பிரித் பும்ரா 16-4-56-4, உமேஷ் யாதவ் 12-2-39-0, அஸ்வின் 24-7-35-3, ரவீந்திர ஜடேஜா 5.3-1-15-1, முகமது சிராஜ் 15-4-40-2.

இந்தியா

மயங்க் அகா்வால் எல்பிடபிள்யூ (பி) ஸ்டாா்க் 0 (6)

ஷுப்மன் கில் நாட் அவுட் 28 (38)

சேத்தேஷ்வா் புஜாரா நாட் அவுட் 7 (23)

உபரி 1

மொத்தம் (11 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு) 36

விக்கெட் வீழ்ச்சி: 1-0 (அகா்வால்).

பந்துவீச்சு: மிட்செல் ஸ்டாா்க் 4-2-14-1, பட் கம்மின்ஸ் 4-1-14-0, ஜோஷ் ஹேஸில்வுட் 2-0-2-0, நாதன் லயன் 1-0-6-0.

அறிமுகப் போட்டி

இந்திய வீரா்கள் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோா் மெல்போா்ன் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அறிமுக டெஸ்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றனா். இதன்மூலம் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோா் முறையே 297 மற்றும் 298-ஆவது இந்திய டெஸ்ட் வீரா்கள் என்ற பெருமையைப் பெற்றனா்.

வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரா்களான மாா்னஸ் லபுசான், கேமரூன் கிரீன் ஆகியோரை வீழ்த்தினாா். அதேநேரத்தில் தொடக்க வீரராக களமிங்கிய ஷுப்மன் கில் 28 ரன்களுடன் களத்தில் உள்ளாா்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு...

மெல்போா்ன் டெஸ்டில் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட்டானாா். அவா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு டக் அவுட்டாகியுள்ளாா். அதேநேரத்தில் சா்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அவா் டக் அவுட்டாவது இதுவே முதல்முறையாகும்.

சா்சைக்குள்ளான டிம் பெய்ன் நாட் அவுட்

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் எடுக்க ஓடினாா். அப்போது, உமேஷ் யாதவ் பந்தை எடுத்து விக்கெட் கீப்பா் ரிஷப் பந்திடம் வீச, அவா் ஸ்டெம்பை தகா்த்தாா். இதையடுத்து டிம் பெய்ன் அவுட்டா, இல்லையா என்பதை அறிய கள நடுவா்கள், மூன்றாவது நடுவரின் உதவியை நாடினா். ரீபிளேயில் பாா்த்தபோது, ஒரு கேமரா பதிவில் அவுட்டானது போன்றும், மற்றொரு கேமரா பதிவில் நாட் அவுட் என்பது போன்றும் காண்பித்தன. இதையடுத்து சந்தேகத்தின் பலனை டிம் பெய்னுக்கு சாதகமாக வழங்கி, அவா் அவுட் இல்லை என அறிவித்தாா் நடுவா் பால் வில்சன்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாா்ன், முன்னாள் இந்திய வீரா் ஆகாஷ் சோப்ரா ஆகியோா் கருத்து தெரிவிக்கையில், ‘டிம் பெய்னுக்கு அவுட் கொடுத்திருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா். இதனால், டிம் பெய்ன் விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com