நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி-20 ஆட்டத்திலும் சூப்பா் ஓவா்: இந்தியா அசத்தல் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி-20 ஆட்டமும் முந்தைய ஆட்டம் போன்று டிரா ஆனதால் சூப்பா் ஓவா் முறை பயன்படுத்தப்பட்டது.
நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி-20 ஆட்டத்திலும் சூப்பா் ஓவா்: இந்தியா அசத்தல் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி-20 ஆட்டமும் முந்தைய ஆட்டம் போன்று டிரா ஆனதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில், இந்திய அணி வென்றதன் மூலம், இந்தத் தொடரின் முதல் 4 ஆட்டங்களையும் கைப்பற்றி வெற்றி நடையை தொடர்கிறது.
 வெலிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
 இதையடுத்து விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது.
 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு அதே 165 ரன்களை எடுத்தது. இதனால், ஆட்டம் டிரா ஆனது.
 கடந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கடைசி 2 பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி வெற்றிக்கு காரணமாக இருந்த ரோஹித் சர்மாவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டது. முந்தைய ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்த போது காயமடைந்ததால், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக பந்துவீச்சாளர் டிம் சவுதீ கேப்டன் பொறுப்பை கவனித்தார்.
 தொடக்க ஆட்டக்காரராக விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர்.
 2-ஆவது ஓவரிலேயே ஸ்காட் பந்துவீச்சில் சாண்ட்னரிடம் கேட்ச் ஆகி 8 ரன்களில் ஆட்டமிழந்தார் சஞ்சு. பின்னர் வந்த விராட் கோலி (11 ரன்), ஸ்ரேயஸ் ஐயர் (1) ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். அணி தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், ஷிவம் துபேவுடன் பொறுப்பாக விளையாடினார் ராகுல். எனினும், இஷ் சோதி வீசிய 9-ஆவது ஓவரில் கேட்ச் ஆகி 26 பந்துகளில் 39 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் ராகுல்.
 ஷிவம் துபே 12 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் ரன்கள் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மணீஷ் பாண்டேவும், ஷர்துல் தாக்குரும் மட்டும் நிதானம் காட்டினர்.
 பவுண்டரிகளுக்கு மெனக்கெடாமல் ஓடியே ரன்களை சேர்த்தனர். எனினும், இந்தக் கூட்டணியையும் பந்துவீச்சாளர் பென்னட் பிரித்தார். அவர் வீசிய 17-ஆவது ஓவரில் கேப்டன் டிம் சவுதீயிடம் கேட்ச் ஆகி 20 ரன்களில் ஆட்டமிழந்தார் ஷர்துல் தாக்குர். யுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
 மணீஷ் பாண்டே மட்டும் பொறுப்புடன் விளையாடி அரை சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 36 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை பதிவு செய்தது இந்தியா.
 நியூஸிலாந்து தரப்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுகளையும், பென்னட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். சவுதீ, ஸ்காட், சாண்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
 நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் கப்டில், காலின் மன்றோ ஆகியோர் களம் இறங்கினர். காலின் மன்றோ அதிரடியாக விளையாடத் தொடங்கிய நேரத்தில், பும்ரா பந்துவீச்சில் 4 ரன்களில் மார்டின் கப்டில் ஆட்டமிழந்தார்.
 மன்றோவுடன் விக்கெட் கீப்பர் டிம் செஃபர்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 10 ஓவர்களுக்கு 2-ஆவது விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் வீழ்த்தவே முடியவில்லை. 10-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் காலின் மன்றோ பவுண்டரி எல்லைக்கு பந்தை விரட்டி அரை சதம் பதிவு செய்தார். எனினும், அவர் 47 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். காலின் டி கிராண்ட்ஹோமுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட டாம் புரூஸ் ரன்கள் எதுவுமின்றி நடையைக் கட்டினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஸ் டெய்லர், 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 18-ஆவது ஓவரில் செஃபர்ட் சர்வதேச டி-20-இல் 2-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். கடைசி ஓவரில் அவர் ரன் அவுட்டானார். அப்போது அவர் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிரா ஆனது.
 ஷர்துல் தாக்குர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ராஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். பின்னர் டி.மிச்செல் களம் புகுந்தார். வந்தவுடன் பவுண்டரி பதிவு செய்தார். 3-ஆவது பந்தில் டிம் செஃபர்ட் ஆட்டமிழக்க இறுதி நிமிடங்கள் பரபரப்பாக கடந்தன.
 4-ஆவது பந்தில் சாண்ட்னர் 1 ரன் எடுக்க 5-ஆவது பந்தை டி.மிச்செல் எதிர்கொண்டு ஷிவம் துபேவிடம் கேட்ச் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 164-ஆக இருந்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டி இருந்த நிலையில், ஒரு ரன்னை எடுத்த சாண்ட்னர், இரண்டாவது ரன் எடுக்க ஓடியபோது ராகுல் அவரை ரன் அவுட் செய்தார். இதனால், ஆட்டம் டிரா ஆனது.
 இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 சூப்பர் ஓவர்: இதையடுத்து வெற்றியைத் தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரை பும்ரா வீசினார். செஃபர்டும், காலின் மன்றோவும் களம் இறங்கினர். முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் செஃபர்ட். மூன்றாவது பந்திலும் 2 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் 8 ஆனது. 4-ஆவது பந்தில் ஆட்டமிழந்தார் செஃபர்ட். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசிய மன்றோ கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
 1 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 13 ரன்கள் எடுத்தது. 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. சூப்பர் ஓவரில் சவுதீ வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்க விட்டார் லோகேஷ் ராகுல். 2-ஆவது பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட அணியின் ஸ்கோர் 10-ஆனது.
 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 3-ஆவது பந்தை சிக்ஸருக்கு முயற்சி செய்தார் ராகுல். ஆனால், அவரது முயற்சி வீணானது. அந்த பந்து ஸ்காட் கைகளில் பிடிபட்டது. ஆட்டமிழந்த ராகுல் அதிர்ச்சியுடன் வெளியேறினார். பின்னர், கேப்டன் கோலியுடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார்.
 சாமர்த்தியமாக 4-ஆவது பந்தில் 2 ரன்களை ஓடி எடுத்த கோலி, கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 1 பந்து மிச்சமிருந்த நிலையில், 16 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி கண்டது.
 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருது வென்றார். 5-ஆவது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஆட்டத்தின்போது பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். உன்னிப்பாக கவனித்து வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்தி விளையாட வேண்டும் என்பதை இந்த ஆட்டம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு டி-20-இல் சூப்பர் ஓவரில் நாங்கள் விளையாடியதில்லை. இப்போது அடுத்தடுத்து 2 சூப்பர் ஓவர் ஆட்டங்களில் விளையாடி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 -கோலி, இந்திய கேப்டன்.

வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைந்துவிட்டோம். இந்திய அணி வெற்றி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் சூப்பர் ஓவரை நான் வீசினேன்.
 - டிம் சவுதீ, நியூஸி. கேப்டன்.

சூப்பர் ஓவரில் ராசியில்லாத நியூஸிலாந்து
 சர்வதேச கிரிக்கெட்டில் (ஒரு நாள், டி-20 உள்பட) சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 7-ஆவது முறையாகவும், தொடர்ந்து 6-ஆவது முறையாகவும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
 முதல்முறையாக 2008-ஆம் ஆண்டில் ஆக்லாந்தில் மே.இ.தீவுகள் அணியுடன் டி-20 ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையை எதிர்கொண்டது நியூஸிலாந்து. அந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.
 அதையடுத்து, 2010-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து வென்றது.
 இலங்கைக்கு எதிரான டி-20 ஆட்டம் (2012), மே.இ.தீவுகளுக்கு எதிரான டி-20 ஆட்டம் (2012), இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 ஆட்டம் (2019), இந்தியாவுக்கு எதிரான இரண்டு டி-20 ஆட்டங்கள் (2020) ஆகியவற்றில் தோல்வியைத் தழுவியது நியூஸிலாந்து.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com